கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்த கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்தியை மக்களிடம் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு, தமது வீதி மறியல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களது உறவினர்கள், தமது போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடையை மீறி வீதி மறியல் போராட்டம்: சட்டத்தரணிகளும் ஆதரவு
கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்திற்கு பொலிஸார் தடையுத்தரவை பெற்றிருந்த நிலையில், குறித்த தடையை மீறி காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு சட்டத்தரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரொன்றை கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த மகஜருக்கு உரிய பதில் கிடைக்கும் வரை வீதி மறியல் போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வீதி மறியல் போராட்டம் நடைபெறும் வீதி வழியாக அம்புலன்ஸ் வண்டிகள் மாத்திரம் செல்வதற்கு போராட்டக்காரர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.