அரச நியமனம் வழங்குமாறு கோரி வட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 85ஆவது நாளாக நீண்டு செல்கிறது.
85 நாட்களாக வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர் எனும் போது, அவர்கள் வேலையில்லாமல் மிகப் பெரும் துன்பங்களை தத்தம் குடும்பங்களில் அனுபவிக்கின்றனர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வசதி வாய்ப்புக்கள்; வேலை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்குமாக இருந்தால், 85 நாட்கள் என்ற நீண்ட நெடு நாள் போராட்டத்தை வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துச் செல்ல மாட்டார்கள்.
ஆக, படித்துப் பட்டம் பெற்றதும் வேலை செய்யலாம். அவ்வாறு வேலை செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்தின் கஷ்டங்களை போக்கலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றனர்.
ஆனால், பட்டம் பெற்றும் வேலைக்காக வருடக் கணக்கில் காத்திருப்பதென்பது மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடியது.
பொருளியலில் பேசப்படும் மனித மூலதனம் என்பது உச்சமாகவும் திறமையாகவும் பயன் படுத்தப்பட வேண்டும்.
ஆனால் நடைமுறையில் எங்கள் வடபுலத்தில் மனித மூலதனம் என்பது கோரிக்கையற்று கிடக்கின்ற வேரில் பழுத்த பலா வகையாக இருப்பதைக் காணமுடிகின்றது.
இதன் காரணமாகத்தான் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும் அவர்களின் போராட்டம் 85ஆவது நாளைக் கடந்துள்ள நிலையில் அவர்கள் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. 85 நாட்களாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்துவதென்பதை ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்வது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
இஃது வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வியல் பிரச்சினை, சதா சந்திக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினையுடன் நெருங்கிய தொடர்புடையது.
ஆகையால் நீங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நினைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் பேசாதிருந்துவிட முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது தொடர் போராட்டம் நடத்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு சரியான - நம்பிக்கையான உத்தரவாதத்தை வழங்கி அவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுறுத்தியிருக்க வேண்டும்.
இதைவிடுத்து இந்தப் பிரச்சினை தென்பகுதியிலும் உள்ளது. வேலையற்ற ஆயிரம் பட்டதாரிகளுக்கு வட மாகாணத்தில் நியமனம் வழங்கவுள்ளோம் எனக் கூறுவதானது ஒரு சாட்டுப்போக்காக இருக்க முடியுமேயன்றி,
போராட்டம் நடத்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நம்பிக்கை தரக்கூடிய உறுதிமொழியன்று.
எனவே வேலையற்ற பட்டதாரிகள் 85ஆவது நாளாக நடத்துகின்ற தொடர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை விடுத்து அவர்களுக்கு நியமனம் வழங்க சம்பந்தப்பட்ட சகலரும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.