எனக்கு மக்கள் பலமில்லை என்றவர்கள் இப்போது திகைத்து நிற்கிறார்கள்-விக்கி (அறிக்கை)


அண்மையில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசக்கட்சியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளும் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையும் ஓந்துள்ள நிலையில் அது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆதரவாக செயற்பட்ட அனைவருக்கும் முதலமைச்சர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் அது தொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில்.

மக்களுக்கு நன்றி

எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.

முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.

மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.

நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.

ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.

ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.

இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின. நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன். உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்












தொடர்புடைய முன்னைய காணொளிகள்















Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila