தமிழ் மக்களாகிய நாங்கள் பல வருட காலமாக சில தவறான நடவடிக்கைகளில் ஊறிவிட்டோம். நாமாக நம்மை மாற்றிக்கொண்டால் தான் எமக்கு விமோசனம். ஆனால் சுயநலம் அதற்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவான் இது உறுதி என் றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை நெருக்கடி முடிவுக்கு வந்த நிலையில்ர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் ஊடான பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவருடனான செவ்வி வருமாறு
01. வடமாகாணசபையின் குறித்த அமைச்சர்கள் மீதான ஊழல் விவகாரம் ப+தாகரமாகும் முன்னர் அதனை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்கலாம் என்று நீங்கள் கருதவில்லையா?
அமைச்சர்கள் மீது குற்றங்கள் இருந்தால் அவற்றை எனக்கு நேரடியாகத் தெரியப்படுத்தும் படியும் அவற்றை நான் விசாரித்து அறிந்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருந்தேன். ஆனால் எமது உறுப்பினர்கள் தமது குற்றச்சாட்டுக்கள் பத்திரிகைகளில் வர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர். அவர்களைப் பேச விட அவைத்தலைவர் உறுதுணையாக இருந்தார். அவ்வாறாயின் நான் எவ்வாறு முளையில் கிள்ளி எறிய முடியும்?
02. உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டமைக்கு உண்மையிலேயே இதுதான் காரணமென்று நீங்கள் கருதுகின்றீர்களா?
என்னை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே சிலரிடத்தில் ஆழப் பதிந்திருக்கின்றது. அதற்கான தருணத்தைப் பார்த்திருந்தார்கள்.
03. எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இவ்வாறானதோர் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று தாங்கள் கருதியதுண்டா? இவ்விவகாரம் தொடர்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை, நிலைமை மோசமடைய வழிவகுத்தது என்று கருதுகிறீர்களா?
மக்கள் பலந்தான் என்னைக் காப்பாற்றியது. அத்துடன் 21 பேர் கையெழுத்திட்டதாகப் பத்திரிகைகளில் கூறப்பட்டிருந்தும் அவ்வாறு 21 பேரின் கையொப்பங்களும் கிடைக்கவில்லை என்று அறிகின்றேன். அத்துடன் வேறு கட்சிகளைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றே விக்னேஸ்வரனை வெளியேற்ற முடியும் என்ற நிலை வந்தவுடன் அவர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டமையையும் கருத்துக்கெடுக்க வேண்டும். இதில் எனக்கென்ன ஆலோசனை தேவையாக இருந்தது?
தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடித்ததாக் கூறப்படுகின்றதே? அது குறித்த உங்கள் கருத்து என்ன?
நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2013ம் ஆண்டைய தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் ஒழுகத் தொடங்கிய காலந் தொடக்கம் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானித்திருக்கின்றேன். எனவே எப்பவாவது ஏதாவது நடைபெறக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். பதவி மீது மோகம் எதுவும் இல்லாததால் எத்தருணத்திலும் வீடு செல்ல நான் ஆயத்தமாக இருந்தேன். இப்பொழுதும் இருக்கின்றேன்.
05. வடமாகாணசபையில் ஏற்பட்ட நெருக்கடி, சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி அதன் ஒற்றுமைக்கும் பங்கமாக அமைந்து விட்டது என்ற கருத்து நிலவுவது தொடர்பில் நீங்கள் கூறவிளைவது என்ன?
இந்த நெருக்கடி மக்களை முன்னிலைப்படுத்திவிட்டது. அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்ட உதவியுள்ளது. ஒற்றுமைக்குப் பங்கம் என்பதிலும் பார்க்க ஒற்றுமைக்கு வித்திட்டுவிட்டது என்றே கூற வேண்டும். பிழையான எண்ணங்களில் வாழ்ந்து வந்த பலருக்கு மக்கள் உண்மையை உணர்த்தி விட்டார்கள். எனவே ஒற்றுமையை நாட வேண்டிய ஒரு சூழலை மக்கள் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
06. இந்த விடயத்தில் இந்தளவுதூரம் எத்தரப்பும் தீவிரம் காட்டியிருக்கத் தேவையில்லை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
பிழைகள் நடப்பதைப் பார்த்து மக்கள் கொதித்தெழுவதைத் தீவிர செயல் என்று நீங்கள் கணிக்கின்றீர்களா?
07. வடமாகாணசபைத் தலைவரின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
விளங்க வேண்டும். தலைவரின் செயற்பாடு அவ்வாறு அமையவில்லை என்பதே எனது கருத்து. ஆனால் அதற்காக அவரைப் பதவி நீக்க வேண்டும் என்றுகூறவில்லை.
08. தமிழ் மக்களின் நலன்கருதி வடமாகாணசபையின் நெருக்கடிக்குச் சமரச தீர்வு காணப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது. ஒரு சிலர் தாங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இதனை மீண்டும் குழப்பியடிக்கும் முயற்சியில் ஈடுபடலாமல்லவா? அது தொடர்பில் உங்கள் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
09. தாங்கள் புதிதாக விசாரணைக்குழு வேண்டுமென்று நியமித்து குறித்த இரு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரவித்துள்ளீர்கள். புதிய விசாரணைக்குழு எப்போது ஆரம்பிக்கப்படும்? காணாமல் போன கோவைகள் மீட்க ஏதேனும் வழிகள் உண்டா? அது தொடர்பிலும் விசாரிக்கப்படுமா?
புதிய விசாரணைக்குழு சம்பந்தமான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கோவைகள் பற்றி உத்தியோக ப+ர்வமாக எனக்குத் தகவல் கிடைக்கவில்லை. அதன் பின்னரே தீர்மானம் எடுக்கலாம்.
10. விசாரணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் கூறியுள்ளாரே?
அவர் நீதிமன்றம் செல்வாரோ இல்லையோ விசாரணை முடிவுகள் மீதான மீளாய்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
11. ஊழல் முறைகேடுகள் அற்ற முன் மாதிரியான சபையாக வடமாகாணசபை இருக்கும் என்ற தமிழ் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறானதோர் துன்பகரமான நிலைமை ஏற்பட்டமை உங்கள் தூய்மையான செயற்பாடுகளுக்குப் பாரிய சவால் எனக் கருதவில்லையா?
தமிழ் மக்களாகிய நாங்கள் பலவருடகாலமாக சில தவறான நடவடிக்கைகளில் ஊறிவிட்டோம். நாமாக நம்மை மாற்றிக் கொண்டால்த்தான் எமக்கு விமோசனம். ஆனால் சுயநலம் அதற்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றது.
12. ஊழல் பேர்வழிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுமே கூறுகின்றன. எனினும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது குறித்த கட்சிகளின் போக்கில் மாற்றம் காணப்படுகின்றதே. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக நோக்கப்படலாமா?
மக்கள் தான் அடுத்த தேர்தலில் அதற்குப் பதில் அளிப்பார்கள்.
13. வடமாகாணசபையில் எதிர்காலத்தில் மீண்டும் ஓர் கொந்தளிப்பு ஏற்படாதிருக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
கொந்தளிப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்றே இருக்கின்றேன். முன்நடவடிக்கைகளில் இறங்க நான் விருப்பப்படவில்லை.
14. தமிழ் மக்களுக்குப் புதிய தலைமைத்துவம் தேவை என்று குரலெழுப்பப் படுகின்றதே அதில் நீங்கள் உடன்படுகின்றீர்களா? இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
இருக்குந் தலைமைத்துவத்தைத் தடம் மாறாமல் பார்த்துக் கொள்வோமாக!
15. நீதித்துறையில் சேவையாற்றிய உங்களுக்கு அரசியல் துறையில் சந்தித்த இந்த சவால் எவ்வாறான மனநிலையை தோற்றுவித்தது?
புதிய அனுபவந்தான். சில உறுப்பினர்களின் குணங்கள் என்னை பிரமிக்கச் செய்தன. இப்படியும் இருக்கின்றார்களா என மலைக்க வைத்தது. பரிதாபமாக இருந்தது.
16. தற்போது ஏற்பட்டுள்ள சமரசம் காரணமாக தமிழ் மக்கள் சற்று நிம்மதி கொண்டுள்ளனர். உண்மையிலேயே உங்கள் நிலைப்பாடு என்ன? இது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றீர்களா?
அரசியல் பலம் கட்சிகளிடம் இருந்து மக்களிடம் சென்றுவிட்டதாக உணர்கின்றேன். கட்சிகள் மக்களுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
17. மீண்டும் மாகாணசபை அமர்வுகள் இடம்பெறும் போது குறித்த நெருக்கடியின் பிரதிபலிப்புக்கள் இருக்குமென்று தாங்கள் கருதவில்லையா? அவ்வாறாயின் அதற்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றீர்கள்?
இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்.
18. ஒரு சில சக்திகள் தங்கள் அரசியல் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்ய முதலமைச்சரைப் பயன்படுத்துகின்றார்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு முதலமைச்சர் சிக்கி விட்டார் என்று கூறப்படுகின்றதே? இதில் உண்மையுள்ளதா?
எவ்வாறு சிலர் தமது அரசியல் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்ய என்னைப் பகடைக் காயாக்கப் பார்த்தார்களோ, தமது பொறிக்குள் என்னை சிக்க வைக்கப் பார்த்தார்களோ அவர்களே இவ்வாறான கருத்துக்களை மற்றவர்கள் மீதாக வைத்துள்ளனர். நான் எதிலும் சிக்கி விடவில்லை.
19. முதலமைச்சரை நாமே கொண்டுவந்தோம். அவர் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ளாரே அது குறித்த உங்கள் கருத்து என்ன?
நான் ஒரு பொது அபேட்சகர்.
20. ஒரு சாரார் வடமாகாண சபை வினைத்திறம் மிக்க ஒன்றாக செயற்படவில்லை. இறுதியில் இழுபறிகளும் சச்சரவுகளுமே எஞ்சிவிட்டன என்று மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனரே? இது குறித்து நீங்கள் என்ற கூற விரும்புகின்றீர்கள்?
வினைத்திறத்தை மற்றவர் கூறுவதை வைத்துக் கணித்தலாகாது. எவை எவை செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்த பின்னர் நீங்களே முடிவுக்கு வரவேண்டும்.
21. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கான நகர்வுகளில் இவ்வாறான சம்பவங்கள் ஓர் பாரிய பின்னடைவை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே இது குறித்த உங்கள் அபிப்பிராயம்?
மாறாக தமிழ் மக்களின் உண்மை நிலையும் அவர்களின் அரசியல் கருத்துக்களும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன.
22. இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்குக் கூறும் செய்தி என்ன?
இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.