முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பகுதியில் படையினர் வசமுள்ள தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி இந்தப் பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 127 ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் கேப்பாப்புலவுப் பகுதியில் தங்களது சொந்தக் காணிகளில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்குள்ள முருகன் ஆலயத்தில் வழமை போன்று வழிபாடு செய்து வந்தனர்.
அதற்கு பின்னர் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆலயத்தில் எந்த விதமான வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தங்களது காணிகளை வற்றாப்பளைப் பொங்கலுக்கு முன்னர் விடுவிக்குமாறு கோரியிருந்தனர். ஆனால் இதுவரை குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.
எதிர்வரும் 12 ஆம் திகதி கேப்பாப்புலவுப் பகுதியில் படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டு முருகன் ஆலயத்தில் வழிபாடு செய்ய படைத்தரப்பு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று படைத்தரப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் பேசியதாகவும், இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இந்த விடயம் தொடர்பாக படைத்தரப்பிடம் பேசியதாகவும் 12 ஆம் திகதி வீதியை விடுவித்து வீதியின் தெற்குப் பக்கமுள்ள முருகன் ஆலயத்தில் அவர்களின் பாரம்பரிய வழிபாடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 127 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இந்த ஆலயம் இதுவரை பூசைகள் எவையும் செய்யப்படாது இருப்பதாகவும், அதற்கான கிரியைகளை செய்து உரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு ஒட்டுமொத்த மக்களும் அங்கே செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் எனவும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.