தமிழரசுக் கட்சியின் தலைவர் அன்புமிகு மாவை சேனாதிராசா அவர்களுக்கு வணக்கம்.
கடந்த ஒரு வாரமாக தங்களின் அரசியல் பணி மிகுந்த சிரமமுடையதாக இருந்திருக்கும்.
போதாக்குறைக்கு சம்பந்தர் ஐயாவும் உங்கள் தலையில் பாரத்தை ஏற்றிவிட்டு, தமிழரசுக் கட்சியின் சாதாரண உறுப்பினன் நான், மாவை சேனாதிராசாதான் அக்கட்சியின் தலைவர் என்று ஒதுங்கிக் கொண்டார்.
ஒரு சம்பிரதாயத்துக்கேனும் சம்பந்தர் ஐயா யாழ்ப்பாணம் வந்திருந்தால் அது உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கும்.
என்ன செய்வது! காலம் பிழைக்கும் போது முதலில் அருகில் இருப்பவர்கள்தான் விலத்திச் செல்வர்.
எதுவாயினும் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் இப்படியயாரு சோதனையை அக்கட்சி முன்பு ஒருபோதும் சந்தித்திருக்கவில்லை.
அதற்குக் காரணமும் உண்டு. முன்பெல்லாம் தமிழரசுக் கட்சியில் அடிமட்டத் தொண்டர்களாக இருந்து அந்தக் கட்சி மீது உயிரை வைத்திருந்தவர்களே அதன் முக்கிய பிரதானிகளாக இருந்தனர். ஆனால் இப்போது அப்படி எதுவும் கிடையாது.
உங்களைப் போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்றையவர்கள் காய்த்த மரத்தில் கனி பறிக்க வந்தவர்கள்.
கனியின் சுவை கண்ட அவர்கள் பவிசு வந்தவர்களாக மரத்தை அடியோடு தறித்து தம் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் என்ன? என்று நினைப்பவர்கள்.
இல்லையென்றால் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரே ரணையை கொண்டு வருபவர்களா என்ன?
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்து வந்துவிட்டு, அவரின் பதவியைப் பறிக்க நினைத்தமை மிகப்பெரும் கபடத்தனம்.
அதைவிட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவனாக இருக்கக்கூடிய விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதென்பது தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.
இவையெல்லாம் நடப்பதற்கு தாங்கள் ஒரு போதும் இடம்கொடுத்திருக்கக்கூடாது.
தமிழரசுக் கட்சி அடியோடு கவிழ்ந்து விடப் போகிறதோ என்றிருந்த நிலையில் தாங்கள் எடுத்த சில முடிவுகள் மிகப்பெரும் தவறில் இருந்து கட்சியையும் தங்களையும் காப்பாற்றி விட்டது.
அதேவேளை இனிவரும் காலங்களில் நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில் வடக்கு மாகாண சபைக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை முற்றுமுழுதாக நீங்கி விட்டதென்று ஒருபோதும் கூறிவிட முடியாது.
இப்போது வடக்கு மாகாண சபையில் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி உருவாகியுள்ளது. இது எதற்கானது.
ஆளும் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணியை உருவாக்குவதாக இருந்தால் இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினீர்களா?
ஆளுங்கட்சியே இப்படியெரு அணியை உருவாக்குமாக இருந்தால் சபையில் அநீதிகளை இழைப்பது யார்?
உங்கள் கட்சியில் இப்படியான அணியை உருவாக்குவதற்கு சட்டங்களும் நடைமுறைகளும் இடம் தருகிறதா? அல்லது ஆளும் கூட்டமைப்புத்தான் இடம்கொடுக்கிறதா?
நீதிக்கான உறுப்பினர்கள் என்ற அணி முதலமைச்சருக்கு எதிரானதா? தொடர்ந்தும் இந்த அணி முதலமைச்சருக்குத் தொந்தரவு கொடுக்குமா? அல்லது ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுமா?
இதென்ன இது? இதெல்லாம் தேவை தானா? இதுபற்றி நீங்கள் சிந்தித்து தமிழரசுக் கட்சி என்ற கூட்டமைப்புக்குள் - உங்கள் தலைமைக்குள் அனைத்தையும் கொண்டு வாருங்கள். எழுந்தமானமாக கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதைக் கட்டுப்படுத்துங்கள்.
இதை கூறவே இவ் அவசர கடிதத்தை எழுதினோம்.