முதலமைச்சர் முதுகில் குத்தினார் சத்தியலிங்கம்?

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் கூட்டு பொறுப்புத்தன்மையினை புறந்தள்ளி தமது கட்சி நாளிதழில் வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையினை தனக்கேற்ற வகையினில் வெளிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மீது வடமாகாணசபையால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களினை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் ஏற்கனவே கையளித்துவிட்டது.குறித்த அறிக்கையினை கூட்டு அமைச்சரவை பொறுப்புக்கள் அடிப்படையினில் முதலமைச்சர் நேற்று மின்னஞ்சல் மூலம் தனது அமைச்சர்களிற்கு அனுப்பிவைத்துள்ளார்.அதனையே சுகாதார அமைச்சரான சத்தியலிங்கம் தமது கட்சிப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே தமது கட்சி பத்திரிகை உரிமையாளரான சரவணபவனின் அரசியல் எதிர்முனையிலுள்ளவர்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ள கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையினில் அதற்கு முன்னராக முதலமைச்சரது நம்பிக்கைக்கு துரோகமிழைத்து அறிக்கையினை திரிபுபடுத்தி ஊடகமூடாக வெளிப்படுத்தியமை தொடர்பினில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தனது ஊழல்களின் முகவராக நியமித்து சகோதரன் ஒருவரது மின்னஞ்சல் ஊடாக இதனை கட்சி நாளிதழிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மாகாணசபை வட்டாரங்களிடையே பேசப்படுகின்றது.
முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த நிலையினில் இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையினில் சத்தியலிங்கம் சொக்கதங்கமென சொல்லப்பட்டுள்ளதாகவும் கட்சி நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila