எழுக தமிழ் பேரணி எவரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் எழுச்சியுடன் நடந்ததால் தென் பகுதிப் பேரினவாதிகள் சீறிப்பாய்ந்து இனவாத நஞ்சைக் கக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா? அல்லது வன விலங்குப் பிறப்புகளா? என்று நினைக்கும் அளவில் பேரினவாதிகள் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வதைக் காணமுடிகிறது.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது பேரினவாதிகள் சீறிப்பாய்வதன் காரணம்தான் என்ன? என்பது புரியாமல் உள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளை மிக நிதானமாகத் தெரிவிப்பது தவறு என்று பேரினவாதிகள் கரு துகின்றனரா? அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரைப் போல் வடக்கின் முதலமைச்சரும் தங்களோடு ஒட்டி உறவாடி தாங்கள் தருகின்ற உதவிகளைப் பெற்று, தமிழ் மக்களுக்காகக் கதைப்பது போல நடித்து அரசுடன் இணங்கிப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? என்பது புரியாமலே உள்ளது.
உண்மையில் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீது பேரினவாதிகள் இன்றுவரை எந்தக்குறையும் கூறியது கிடையாது.
வரவு செலவுத் திட்டத்தின் போது கூட இரா.சம்பந்தர் அரச தரப்பிற்கு ஆதரவாகச் செயற்பட்டார்.
முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சிறில்மத்தியு என்ற அன்றைய அமைச்சரும், நெவில் பெர்ணான்டோ என்ற பாணந்துறை எம்.பியும் அமிர்தலிங்கத்தை படுத்தாப்பாடு படுத்தினர். காலி முகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைப் பிளக்க வேண்டும் என்று கர்ச்சித்தனர்.
இதற்குக் காரணம் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகத் தெளிவாக - துணிவாக பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், வெளிநாடுகளுக்கும் நிலைமையைத் தெரிவித்ததேயாகும்.
ஆனால் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு பேரினவாதிகள் மிகுந்த மதிப்புக் கொடுக்கின்றனர். அதேவேளை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எழுக தமிழ்ப் பேரணியின் இறுதியில் ஆற்றிய உரைகண்டு சீறிப்பாய்கின்றனர்.
எனினும் இந்த சீற்றம் குறித்து தமிழ்த் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என்பதுதான் தெரியவில்லை.
வடக்கின் முதலமைச்சர் எழுக தமிழ்ப் பேரணியில் ஆற்றிய உரையை விட; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்ட மேடைகளில் ஆற்றிய உரைகளே மிகவும் காத்திரமானவை.
மிகத் துணிச்சலோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சொல்ல வேண்டியதை சொல்லியுள்ளார்.
அப்போதெல்லாம் பேசாமல் இருந்த பேரினவாதிகள் பேரணிக்குப் பின்பு இத்துணை ஆவேசம் அடைவது எதற்காக? யாருக்கு உதவி செய்வதற்காக? என்ற கேள்விகள் தமிழ் மக்களிடம் எழவே செய்யும்.
எதுவாயினும் யாரையேனும் காப்பாற்றும் நோக்கில் பேரினவாதிகள் கொக்கரிப்பார்களாயின் அது வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான பேராதரவை தமிழ் மக்களிடம் மென்மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.
இதைப் பேரினவாதிகள் உணர்ந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்குப் பின்னணியாக இருப்போர் உணர்வது அவர்களின் எதிர்காலப் பதவிகளுக்கு ஆரோக்கியமாக அமையும் எனலாம்.