வட மாகாணத்தில் கடமையாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு முறையற்ற விதத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டமை தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக,
ஒன்றரை வருட காலத்துக்குள் 3 தடவைகள் இடமாற்றம் வழங்கியமை, சுகாதார
அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்கள் அல்லாத வெவ்வேறு அமைச்சுக்களுக்கு கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களை கட்டாய இடமாற்றம் செய்தமை, உரியவர்களுடன் கலந்துரையாடாமல் சீரான முறையில் இடமாற்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளாமை, போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு எதிராக கடந்த மே மாதம் 23ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த எழுத்தாணை மனுவில் எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் ஆகியோரை குறிப்பிட்டு மேற்குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் கீழ் இடம்பெற்றதாகவும், வேறு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்களை தன்னிச்சையாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார்.
எனவும், இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்களும் தொடர்ச்சியாக தமக்கு நடந்த அநீதிக்கு நீதிகோரி வழக்கு தொடரவுள்ளார்கள் எனவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தமது விண்ணப்பத்தை மன்றில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் குறித்த எழுத்தாணை விண்ணப்பத்தின் விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.