ஜனநாயக ஆட்சியில் எதிர்க்கட்சி என்பது ஒரு பலமான சக்தி.
ஜனநாயகம் நிலைக்கவும் ஆளுந்தரப்பு ஏதேச்சதிகாரமாக நடக்காமல் இருக்கவும் எதிர்க்கட்சி மிகவும் நிதானமாகவும் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.
ஜனநாயகம் எங்கெல்லாம் உயர்வுபெற்றிருக்கிறதோ அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தமது காத்திரமான பங்களிப்பை வழங்குவதைக் காணலாம்.
அதேநேரம் எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது பொருளல்ல.
சரியானதை, நியாயமானதை நிலைநாட்டு வதுதான் எதிர்க்கட்சியின் கடமைப்பாடு.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை பாராளுமன்றத்தில் இருந்தபோது, அவர் ஆற்றிய உரைகள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை அதிர வைத்தது.
சிங்கள ஊடகங்கள் அவரின் உரைக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் பேசுகிறார் என்றவுடன் பாராளுமன்ற ஆசனம் அலைகடலென நிறைந்து கொள்ளும். உறுப்பினர்கள் உரையைச் செவிமடுக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்வர்.
இதனால்தான் தமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்கக்கூடாது என்று சிங்கள அரசியல்வாதிகள் கருதினர். அதற்கான திட்டங்களையும் தீட்டி அதனை அமுலாக்கினர்.
எதிர்க்கட்சித் தலைமை தமிழ்த் தரப்புக்கானதாக இருந்தால், ஆட்சியாளர்கள் பலவற்றுக்கு பதிலளிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு, பிரதேச அபிவிருத்தி, கட்டுமானப் பணிகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி கேட்பர்.
இதனால் தமிழ்ப் பிரதேசங்களுக்கும் சரியான ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பில் பெரும்பான்மையை முன்னிலைப்படுத்த முடியாமல் போகும் என்ற பயம் சிங்கள ஆட்சியாளர்களை தொட்டுக் கொண் டது.
இதனால் தமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்காமல் பாராளுமன்றத் தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது.
விகிதாசாரத் தேர்தல் முறையோடு தமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைப்பது தடுக்கப்பட்டது.
இப்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பே எதிர்க்கட்சித் தலைமையில் இருக்கிறது என்று யாரேனும் கூறினால் அது தவறு.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் முடிவின்படி உண்மையான எதிர்க்கட்சித் தலைமை தமிழர்களுக்கு உரியதல்ல. அது சிங்களத் தரப்புக்கே கிடைக்க வேண்டும்.
தேசிய அரசு உருவாகியதால் தேசிய அரசை எதிர்க்காமல் அவர்களோடு ஒத்துப்போகக் கூடியதான எதிர்க்கட்சி தேவைப்பட்டபோது, அதற்கு நாங்களே பொருத்தம் என்று அவர்கள் ஆதரித்தனர். அந்தக் கணிப்பு இம்மியும் பிசகாமல் நடக்கிறது.
ஆனால் ஜனநாயகத்துக்கான எதிர்க்கட்சியின் வகிபங்கு என்பது இப்போது அங்கு இல்லை.
ஆக, தமிழர் தரப்பு எதிர்க்கட்சித் தலைமையை எடுத்ததால் எல்லாம் தொலைந்தது என்பதாகவே நிலைமை முடியப் போகிறது.