குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் மாணிக்க வாசகர் மன்னன் கொடுத்த பொன், பொருளை யெல்லாம் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுத்து சமூக நலச்சேவை புரிந்தார்.
குதிரைகள் வாங்கச் சென்ற மந்திரி இப்படிச் செய்யலாமோ! என்று செண்பகப் பாண்டிய மன்னன் கோபமுற்றான். மணிவாசகரைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.
குதிரை வாங்குவதற்கு முன்னதாக மக்க ளின் வறுமையைப் போக்க வேண்டும். அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை மன்னன் செய்யவில்லை.
அதாவது தமிழ் மக்களின் வாக்குகளால் அரசியல் பதவி பெற்றவர்கள் வாகன பெர் மிற்றுக்கு ஓடித் திரிகிறார்கள்.
பசியில் வாடும் மக்களையோ ஓலைக் குடிசையில் உறங்கும் ஏழைகளையோ அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை.
இது போலத்தான் பாண்டிய மன்னனும் தான் சவாரி செய்ய உயர்ந்த ரக குதிரைகளுக்காக பொன் பொருளைக் கொடுத்தானேயன்றி மக்களின் நலன்சார்ந்து அவன் எதுவும் சிந்தித்திலன்.
ஆனால் அன்பு மயப்பட்ட மணிவாசகர் தான் கொண்டு சென்ற பொன், பொருளையயல்லாம் சிவனடியார்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
மக்கள் நலப்பணி அமைச்சராக மாணிக்க வாசகர் இருந்திருப்பார் போலும்.
பரவாயில்லை, மந்திரியை மன்னித்து விட்டிருந்தால் அது பாண்டிய மன்னனுக்குப் பெருமை தந்திருக்கும்.
ஆனால் மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையிட்டான். இதனால் செண்பகப் பெருமான் கோபங் கொண்டார். அவரின் கோபத்தால் வைகை நதி பெருக்கெடுத்தது.
செம்மனச்செல்விக்காக தானே கூலியாளாக சிவப்பரம்பொருள் வந்தார். கூலியாள் என்று புறந்தள்ளாதே.
அவர் மீதும் அன்பு வை. அவனும் என்னவனே என்பதைக் காட்டவே செண்பகப் பெருமான் கூலியாள் வேடம் கொண்டார்.
வழங்கப்பட்ட வேலையை அந்தக் கூலியாள் செய்யவில்லை. இதனைக் கண்காணித்த பாண்டிய மன்னன் செம்மனச் செல்விக்கு கூலியாக வந்தவரின் முதுகில் அடித்தார்.
அந்த அடி மன்னனுக்கும் மற்றுமுள்ளோருக்கும் முதுகில் பட்டு வலியால் துடிதுடித்தனர்.
அப்போதுதான் பாண்டிய மன்னனுக்கு சிறை அடைப்பு; தண்டனை வழங்கல் என்றால் என்ன என்று தெரிந்தது. மணிவாசகரை விடுதலை செய்தான்.
அது சரி, இது ஏன் என்று நீங்கள் கேட்டால், கூட்டமைப்பு கூட்டமைப்பு என்றிருந்த புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கு தமிழரசுக் கட்சி ஒரு போடு போட்டுள்ளது.
இப்போது சித்தார்த்தன் அவர்களுக்கு கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய - வெளியேற நினைக்கின்றவர்கள் ஏன் அப்படி முடி வெடுத்தனர் என்பது புரிந்திருக்கும்.
ஆக, பாண்டிய மன்னனின் முதுகில் பரமனின் அடி விழுந்ததால்தான் மணிவாசகருக்கு விடுதலை கிடைத்தது.
அதுபோல புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களுக்கு விழுந்த அடி என்ன செய்யும் என்று பார்க்கலாம்.