முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தரும் விரைவில் சந்திக்கவுள்ளதான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
நேரிலும் தொலைபேசி ஊடாகவும் அடிக் கடி கதைக்க வேண்டிய இரு தமிழ்த் தலைவர்கள் சந்திப்பதென்பதே இப்போது முக்கியமான விடயமாயிற்று. அந்தளவுக்கு நிலைமை இறுக்கமடைந்துள்ளது.
எனினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் சந்திப்பதென்பது மிகவும் முக்கியமான விடயம். இவர்கள் இருவரும் சந்திப்பது அவசியமாயினும் இந்தச் சந்திப்பு முன்னைய சந்திப்பு போல இருக்கக்கூடாது என்பது கவனிக்கப்பட வேண்டும்.
அதாவது இனிமேல் இடம்பெறப்போகும் சந்திப்புக்கு முன்னரும் இரண்டொரு சந்திப்புக்கள் நடைபெற்றன.
ஆனால் அந்தச் சந்திப்பின் மூலம் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு இருந்த நெருக்கடிகள் எதுவும் அகற்றப்படவில்லை.
அந்த நெருக்கடிகளை நீக்கவேண்டுமென சம்பந்தர் நினைக்கவில்லையா? அல்லது சம்பந்தர் நினைத்தாராயினும் அவரால் அதனைத் செய்ய முடியவில்லையா? என்பது புரியவில்லை.
பொதுவில் வடக்கு மாகாண சபையின் இயங்கு நிலைக்கு சபை உறுப்பினர்கள் சிலர் மிகப்பெரும் தடையாக இருந்தனர் - இருக்கின்றனர்.
இதுபற்றி இரா.சம்பந்தர் அறிந்து வைத்திருந்த போதிலும் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரங்கேறியது.
இந்த அரங்கேற்றத்துக்கு சம்பந்தரும் உடன்பட்டார் என்று கூறுவதை அடிப்படையில் நிராகரித்துவிட முடியாது.
எனினும் தமிழ் மக்களின் பேராதரவுடன் முதலமைச்சரின் பதவி பாதுகாக்கப்பட்டது.
ஆக, இப்போது வடக்கின் முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்ந்த முதலமைச்சர் அல்ல என்பது நிரூபணமாகிறது.
ஆகையால், முதலமைச்சருக்கும் இரா.சம்பந்தருக்கும் இடையில் நடைபெறும் சந்திப்பு என்பது பல விடயங்களுக்கு தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்.
சம்பந்தரால் அழைத்து வரப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 14.06.2017 அன்று இரவு 8 மணியளவில் ஆளுநர் கூரேயிடம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டதோடு அந்தப் பதவியில் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டார்.
இப்போது வடக்கின் முதலமைச்சராக இருக்கும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தமிழ் மக்கள் தங்கள் தலைவனாக ஏற்று பேரணியாக வந்து அவரை முதலமைச்சராக பிரகடனம் செய்து வைத்துள்ள னர்.
எனவே 14.06.2017க்கு முந்திய வடக்கின் முதலமைச்சர் வேறு. இப்போது இருக்கின்ற முதலமைச்சர் வேறு.
ஆகையால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தருடன் சந்திக்கும் போது ஆணித்தரமாக பேச வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.