ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிர தேசத்துக்கும் தொன்மைச்சான்றுகள் உண்டு.
அதனால் அந்தந்த நாடுகள் பெருமையும் புகழும் பொருளாதார வளமும் பெற்றுள்ளன.
இலங்கையில் தமிழர் தாயகத்தில் ஆலயங்களே பெருமைக்குரிய தொன்மைச்சான்றுகளாகும்.
யாழ்ப்பாணம் என்றதும் நல்லூர்க்கந்தப் பெருமான் ஆலயமே நம் மனக்கண்முன் தோன்றும்.
அதுவே தீவகம் என்றதும் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்று நா உச்சாடனம் செய்யும்.
அந்த உச்சாடனத்தில் கண்கள் பனித்துக் கொள்ளும். இந்த உயரிய ஆன்மிக சக்திப் பேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது எனலாம்.
அந்தளவுக்கு நயினை நாகபூசணி அம்மனின் அருள்கடாட்சம் ஈழத்தமிழர்களின் உள்ளமெல்லாம் வியாபித்து நிற்கிறது.
ஈழத்தமிழன் உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நயினை நாகபூசணி என்றதும் அவனால் நெக்குருகாமல் இருக்க முடியாது எனுமளவில் அன்னை நயினை நாக பரமேஸ்வரி எங்களின் தாயாக ஒவ்வொரு உள்ளத்திலும் குடி கொண்டுள்ளார்.
அன்னையின் மகோற்சவம் நேற்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இன்று தெப்பத் திருவிழா.
அலை கடல் மீது நயினை நாக இராஜேஸ்வரி எழுந்து வரும் அற்புதக் காட்சி இடம்பெறவுள்ளது.
இதனிடையே மஹோற்சவ காலத்தை தொடக்கமாகக் கொண்டு பொலித்தீன் பாவனையை ஆலய நிர்வாகம் தடை செய்துள்ளது.
தடை செய்தல் என்று அறிவிப்பது சாதாரணமானது. தடை செய்வது என்று அறிவித்து விட்டு அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்வது மிகச் சிறப்பானது. இந்த வழியை ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதில் ஒன்று அர்ச்சனைத் தட்டுக்களை பனையோலையில் செய்து அதனையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இஃது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் எங்கள் மண்ணில் மிகப் பெரும் சொத்தாக இருக்கும் பனை வளத்தை பயனுற வைப்பதற்கு உதவுவதாகும்.
ஆலயத்தின் பூசைப் பொருட்களை வைப்பதற்கு பனையோலையால் செய்யப்பட்ட அர்ச்சனைத் தட்டுக்களை பயன்பாட்டுக்கு விடுவதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது.
அதனோடு பனைவளத்தைப் பாதுகாத்தல் அவசியம் என்ற நினைப்பும் ஏற்படும். இந்த வகையில் நயினை நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கை பாராட்டுதற்குரியது.
அதேவேளை இதுபோன்ற சிந்தனைகள் எழுச்சி பெறவும் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கம் கொடுக்கவும் ஏழை மக்களின் ஒவ் வொரு வீடுகளிலும் குடிசைக் கைத்தொழில் உயர்வு பெற்று அவர்களின் வருமானத்துக்கு உதவுவதுமான திட்டங்கள், நடைமுறைகள் அமுலுக்குக் கொண்டு வரப்படுவதும் மிகவும் அவசியமாகும்.