விக்கினேஸ்வரன்-சங்கரி சந்திப்பு-புதிய கட்சியின் தொடக்கமா?

வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் முதலமைச்சர் இல்லத்தில் நேற்றிரவு திடீர் சந்திப்பு நடைபெற்றதாக தெரியவருகின்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தருணத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்க வருமாறுஇ வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதலமைச்சருக்கு ஆதரவான அணியைச் சேர்ந்த மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், வீ.ஆனந்தசங்கரியை நள்ளிரவில் சென்று சந்தித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் நேற்றிரவு 6.30 மணிக்கு ஆரம்பமான சந்திப்பு 7.15 மணிவரை நீடித்தது.

சந்திப்பு முடிவடைந்த பின்னர் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், முதலமைச்சரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவரைப் பற்றி விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகைகளில் முதலமைச்சரைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. முதலமைச்சரின் மன ஆறுதலுக்காக அவரை நான் சந்திக்க வந்தேன் எனத்தெரிவித்தார்.

இதன்போது பத்திரிகையாளர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றனவே என்று கேட்டபோது, முதலமைச்சரிடம், நீங்கள் தலைமை தாங்க வருவதாக இருந்தால் எனது கட்சித் தலைமையை வழங்கத் தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சருக்கு மாத்திரம்தான் உண்டு. எனது கட்சி தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற மூத்த பெரிய தலைவர்களால் தொடங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறினார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் ஓம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. மக்களின் விருப்பம் அதுதான் என்பதை அவரிடம் கூறினேன் எனட்றார் சங்கரி.











Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila