
வடக்கு மாகாணத்தில் கடற்படையினரின்
அபகரிப்புக்குள் காணப்படும் 45 காணிகளை நிரந்தரமாக உடைமையாக்குவதற்கான இரகசிய கூட்டம் ஒன்றும் மன்னாரில் நடைபெறவுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடற்படையிரின் ஆக்கிரமிப்பில் பலநூறு ஏக்கர்களைச் சேர்ந்த 45 காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகவும் அரச காணிகளாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறான காணிகளை கடற்படையின் உடைமையாக்கும் முயற்சிகளுக்கு மக்கள் தொடர் எதிர்ப்புக்களை வெளியிட்டுவருகின்றனர். இந்த நிலையில் படைத்துறை செயற்பாட்டளாகச் செயற்பட்டு தற்போது வவுனியா மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கின்ற கே. சமரசிங்க என்பவரின் ஏற்பாட்டிலேயே மன்னார் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று தலைமன்னார் கடற்படை தலைமை அலுவலகத்தில் நில அளவைத் திணைக்கள முக்கியஸ்தர்களும் கடற்படையினரும் இரகசிய மந்திராலோசனையில் ஈடுபட முடிவெடுத்திருப்பதாக வவுனியா நில அளவைத் திணைக்களத்தின் பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி தமிழ்கிங்டொத்திடம் கருத்துவெளியிட்டிருகின்றார்.
இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர்களும் தெரிந்தும் தெரியாதவாறு இருப்பதாகவும் அந்த உத்தியோகத்தர் குற்றம் சாட்டியுள்ளார்.