அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிரணி எம்.பியொருவரால் 1983 கலவரம் பற்றி எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சு பதில்களை வழங்கியிருந்தது.
அதில் 1983 ஜூலை இனக் கலவரத்தில், ஆகஸ்ட் மாதங்களில் ஏழு தமிழர்களே கொல்லப்பட்டனர் என்றும், 335 பேரே இடம்பெயர்ந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தரவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அத்தோடு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் எந்த அளவுக்கு மூடி மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதையே இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை என்பது கறுப்பு ஜூலை எனப் பதிவிடப்பட்டிருக்கின்றது. அந்த அளவுக்கு வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மிக மோசமான இனக் கலவரம் நடந்தேறியது.
இதிலே பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன; சூறையாடப்பட்டன. இவை யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மையாகும்.
இக்கலவரத்தில் இடம்பெயர்ந்து சென்றவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் வடக்குப் பகுதியில் குடியேறினர். சிலர் சிங்கள கிராமங்களுக்கு அண்மித்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
இன்னும் சிலர் நாட்டை விட்டே வெளியேறினர். எனினும், இது தொடர்பான விபரங்கள் முற்றாக மூடி மறைக்கப்பட்டிருக்கின்றது என்பது பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது.
இன்று நல்லாட்சியில் சகவாழ்வையும் சமாதானத்தையும் முன்னெடுக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது. இந்தச் செயற்பாட்டில் 1983 இனக் கலவரத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கப்பெற வேண்டும்.
அன்று மூடி மறைக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பான தரவுகள் மீளத் திரட்டப்பட வேண்டும். அதிலே தமிழ் மக்கள் சார்ந்த சமூக அமைப்புகள் அக்கறை காட்ட வேண்டும். அதன் மூலமே இதன் உண்மைத்தன்மையை நாங்கள் வெளிப்படுத்த முடியும்.
அன்று இருந்த, அதற்குப் பின் வந்த எமது தலைமைகளின் இயலாமையையும் பொறுப்பற்ற தன்மையையுமே இது எடுத்துக்காட்டுகின்றது.
இன்றும் நாம் இது ஒரு காலம் கடந்ததாக தட்டிக்கழிக்க முற்படக்கூடாது. அன்று நாட்டுக்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட இந்தச் சம்பவம் இன்றாவது சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் அன்று பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு நீதியான வகையில் நாம் செயற்பட வேண்டும் என்றார்.