வடமராட்சியின் துன்னாலை மற்றும் அதனை அண்டிய கிராமங்களினில் பதற்றமான சூழலொன்றை பேண இலங்கை அரசு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அப்பகுதி பொது அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. அவ்வகையினில் மீண்டும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு சுற்று ரோந்து நடவடிக்கைகளும், வீதிச் சோதனைகளும் நடத்தப்பட்டுவருகின்றதெனவும் அவ்வமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மீது குடத்தனைப் பகுதியில் வைத்து இலங்கை காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில்; ஜீப் வண்டி ஒன்றும் காவலரணும் தாக்கி சேதப்படுத்தி தீ வைக்கப்பட்டது. அத்துடன் அதிரடிப்படையினரின் பவள் கவசவாகனம் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் 21ஆம் திகதி வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து கடலோரக் காவல்பணியினை முடித்துவிட்டு முகாம் திரும்பிக் கொண்டிருந்த கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படை அணியினர் முதலாம் கட்டமாக இம் மாதம் 05, 06 மற்றும் 07ஆம் திகதிகளில் துன்னாலைப் பகுதிகளில் சுற்றி வளைப்பு களை மேற்கொண்டு தொடர்கைதுகளை அரங்கேற்றினர்.
இதனையடுத்து அச்சங்காரணமாக இளைஞர்களினில் பெரும்பாலானவர்கள் கிராமத்தை விட்டுவெளியேறியிருந்தனர்.பின்னர் கைதுகள் ஓய்ந்திருந்தது.
இந்நிலையினில்; மீண்டும் விசேட அதிரடிப்படையினர்; கடந்த சில நாட்களாக துன்னாலைப் பகுதியினை அண்டிய பகுதிகளில் சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். ரோந்து நடவடிக்கைகளினில் எவரும்; கைது செய்யப்படவில்லை.
எனினும் மீண்டும் அதிரடிப்படையின் பிரசன்னம் மக்களிடையே அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளதுடன் வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்த இயல்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.