இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபக்கம் ஒலிக்கின்றது.
மக்கள் மீளக்குடியமர்வதற்கு இது அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில்,
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவுக்கு மீண்ட தீவக மண் தேடுவாரற்றுக் கிடப்பது குறித்து எவரும் கவலை கொள்வதாக இல்லை.
போருக்கு முன்பாக தீவகத்தில் வாழ்ந்த மக்கள் தொகைகளில் மிகச்சிறிய பகுதியினரே அங்கு மீளக் குடியமர்ந்துள்ளனர்.
ஏனையவர்கள் யாழ்ப்பாண நகரப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர்.
மிகப்பெரும் நிலப்பரப்பையும் கடல்வளத்தையும் கொண்டுள்ள தீவகம் மிகக் குறுகிய சனத் தொகையை மட்டுமே தனதாக்கிக் கொண்டு போரின் எச்ச சொச்சங்களை காட்சிப்படுத்தி தனக்கு ஏற்பட்ட அழிவை அடையாளப்படுத்தி நிற்கிறது.
இவ்வாறான நிலைமையால் அங்கு மீளக் குடியமர்ந்த மக்களின் வாழ்வியலும் அச்சம் நிறைந்ததாக ஆரோக்கியமற்றதாக இருப்பதனைக் காண முடியும்.
தீவகத்திலுள்ள நிலபுலத்தின் சொந்தக் காரர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த நிலையில் அங்குள்ள காணிகள் பற்றைக்காடுகளாகக் காட்சி தருகின்றன.
கூடவே போரில் உடைந்துபோன வீடுகள் பேய்கள் குடியிருக்கும் காடுகளாயின. இத் தகைய ஒரு பயங்கரமான களநிலையிலேயே தீவக மக்களின் வாழ்வியல் உள்ளது.
தீவகம் என்றால் அது ஒரு பயங்கரமான இடம் என்ற நினைப்பை அவ்வப்போது அங்கு நடந்த கொடூரச் சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன.
இருந்தும் தீவகத்தின் இருப்பு நிலையை, அங்கு வாழுகின்ற மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
சுற்றிவரப் பற்றைகள், நடுவிலே வீட்டுத் திட்டத்தில் கிடைத்த இருப்பிடம், குழந்தைகள் சிறுவர்களுடன் அந்தக் குடும்பம்.
இரவுப் பொழுதில் ஆந்தையின் அலறல்களும் சுடலைக் குருவிகளின் ஓலங்களும் தான் அங்கு ஆட்சி செய்யும்.
ஓ கடவுளே! எத்தனை வயல் நிலங்கள் தேடு வாரற்றுக் கிடக்கின்றன. கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாய் பல வீனப்பட்ட பயனாளிகள்.
எந்த அமைப்புகளையும் தீவகத்துக்கு அனுப்பி வைக்கத் தயங்கும் உயர் அதிகாரிகள். இத்தகைய நிலைமையில் அருமந்த தீவக மண் பாழ்பட்டு கிடக்கிறது.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நினைத்தாலே தாழமுடியாத வேதனை.
தீவகத்தில் வாழும் ஏழை மக்களின் சீவியத்தில் ஒலிவாங்கி வைத்து பேசுவது மட்டுமே அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பக்கவாத்தியம் இல்லாத கச்சேரியாக முடிகிறது.
அரசியல்வாதிகள் தங்களுக்கென்று பிர தேசம் பிரித்து தமிழ் மக்களைத் தரம்பிரித்து தீவகத்தை புறந்தள்ளியுள்ளனர்.