இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை இதுவரை நிறுவாமல் இருக்கின்றமை பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் விசேட செயற்குழு தெரிவித்திருக்கிறது.
அத்துடன் இந்த அலுவலகத்தை விரை வில் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தாம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஐக்கியநாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் விசேட செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஐ.நா.வின் இந்த விசேட செயற்குழு நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடருக்கு தாக்கல் செய்துள்ள நீண்ட அறிக்கையிலேயே இலங்கை தொடர்பான இந்த வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
ஐக்கியநாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் விசேட செயற்குழுவானது கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இந்த ஐ.நா. செயற்குழுவின் பிரதிநிதிகள் நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்து காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.
அத்துடன் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்நிலையில் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய காணாமல்போனோர் தொடர்பான ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் பிரதிநிதிகள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.
அதில் இந்த காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கை தொடர்பான முழுமையாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்தவகையில் தற்போது இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் தொடர்பிலேயே ஒரு நீண்ட அறிக்கையை ஐ.நா. செயற்குழு மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்திருக்கிறது.
அதில் பல்வேறு நாடுகளினதும் காணாமல் போனோரின் நிலைமை தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இலங்கைக்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு:-
இலங்கையின் காணாமல்போனோர் தொடர்பாக நிறுவப்படவுள்ளதாக கூறப்படும் நிரந்தர அலுவலகம் இதுவரை அமைக்கப்படாமை குறித்து ஐ.நா.வின் செயற்குழு பாரிய கவலை அடைகிறது. இந்த அலுவலகம் இதுவரை அமைக்கப்பட்டு தொழில்படாமை தொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம். இந்தநேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு முக்கிய வலியுறுத்தலை விடுக்கவிரும்புகிறோம்.
அதாவது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.நா.வின் பலவந்தமாக காணாமல்போனோர் குறித்த விசேட செயற்குழு இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டபோது காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் முன்வைத்த பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பான விவாதங்கள் எதுவும் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறாது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை விவகாரம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
எனினும் பொதுவான விவாதங்களின்போது பல்வேறு தலைப்புக்களின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இலங்கை குறித்து வலியுறுத்தல்களை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இந்த 36 ஆவது கூட்டத் தொடரின் போது ஜெனிவா வளாகத்தில் இலங்கை விவகாரம் குறித்த உபக்குழுக்கூட்டங்களை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்டக்குழு பங்கேற்க மாட்டாது. மாறாக ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் இந்தக் கூட்டத் தொடரில் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும்போது இலங்கை தொடர்பான ஒருசில விடயங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 11 ஆம் திகதி 36 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை நிலைமை தொடர்பில் சில விடயங்களை முன்வைக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும் இலங்கை தொடர்பாக உத்தியோகப்பூர்வமான முறையில் எந்தவொரு விவாதமும் இல்லாத நிலையில் அவர் இலங்கை குறித்து பிரஸ்தாபிப்பாரா என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 2016 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதலாவதாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் நிரந்தர அலுவலகம் குறித்த சட்டம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அதன் பின்னர் அதில் திருத்தங்கள் முன்வைக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கமைய காணமல்போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
Add Comments