தீர்வு விடயத்தை ஆராயவேனும் எல்லோரும் ஒன்றுசேருங்கள்


நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கோவில் என்ற திரைப்படமொன்றில் வந்த காட்சி இது.

ஒரு தேநீர்க் கடைக்கு முன்பாக சிலர் சண்டை யிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சண்டை உச்சமடைகிறது. சண்டையை நிறுத்துவதற்காக ஒருவர் வந்தே மாதரம் என்ற பாடலை வானொலியில் ஒலிக்கச் செய்கிறார்.

அவ்வளவுதான் கூச்சலிட்ட அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டு பாரதமாதாவுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு சொல்லுவார் எவ்வளவுதான் எங்களுக்குள் சண்டை இருந்தாலும் பாரத தேசம் என்ற வுடன் அனைவரும் ஒன்றுபட்டு விடுகிறோம். இதுதான் இந்தியாவின் ஒற்றுமை என்று.

ஆம், இந்தியாவில் ஹிந்தி மொழி பேசுபவர் கள், தமிழர்கள், ஆந்திராக்காரர்கள், தெலுங்கர், சீக்கியர் என ஏகப்பட்ட இனத்தவர்கள் இருந்தாலும் இந்தியா என்று வந்து விட்டால் அவர்கள் அனைவரும் இந்தியர்களாகி விடுவர்.

1999ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் எல்லையான கார்கிலில் பாகிஸ்தான் போர் தொடுத்தது. அப்போது வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

கார்கில் போரை வெற்றி கொள்வதற்காக இந்திய தேசத்தில் உள்ள அத்தனை கட்சி களும் ஒன்றுசேர்ந்தன. அன்றைய எதிர்க் கட்சியான காங்கிரஸ், பிரதமர் வாஜ்பாயின் கரங்களை வலுப்படுத்தியது.

போர் வீரர்களின் நலன்களுக்கு நிதி சேக ரிப்பதற்காக இந்திய தேசத்து திரைப்பட நடிகர் களும் கிரிக்கெட் வீரர்களும் உதைபந்தாட்ட போட்டியை நடத்தினர். பாரத பூமி ஒன்றுபட்ட தால், கார்கில் போரில் இந்தியா வெற்றி கொண்டது.

ஆக, எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினை கள், கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழர்கள் என்று வந்துவிட்டால் எங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். இல்லையேல் எங்கள் இனம் வாழ முடியாமல் போகும்.

ஆகையால் அரசியலமைப்புச் சீர்திருத்தத் தின் இடைக்கால வரைபு வெளியாகி இருக்கும் இந்நேரத்தில், நாம் ஒன்றுபடுவது மிகவும் அவசியமானதாகும். இந்த ஒற்றுமை தமிழின் பெயரால் தமிழ் மக்களின் பெயரால் நடந்தாக வேண்டும்.

எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் என்பதே நோக்கமாக இருந்தால், எங்கள் இனம் கந்தறுந்து போய்விடுமல்லவா?

ஆகையால் அனைத்துத் தமிழ்த் தரப்பு களும் ஒன்றுபட்டு இடைக்கால வரைபை ஆராயுங்கள். அதில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை வெளிப்படுத்துங்கள்.

இதைவிடுத்து தமிழ்த் தரப்புகள் இரண்டா கப் பிரிந்து ஒரு தரப்பு இடைக்கால வரைபில் எங்களுக்கான எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று கூற, மற்றைய தரப்பு இடைக்கால வரைபில் ஒன்றுமே இல்லை என்று கருத்து ரைக்க நிலைமை எப்படியாகும் என்பதை ஊகிப்பது கடினமன்று.

ஆகையால் இரண்டு கருத்துக்களை முன் வைக்கின்றவர்கள் நேரம் ஒதுக்கி ஒன்றுகூடி இடைக்கால வரைபில் எங்கெங்கு சூக்குமங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும்.

இதைச் செய்யாவிட்டால் சிங்களவர்கள் எங்களுக்குச் செய்த நிட்டூரத்தைவிட நம்மவர் கள் நமக்குச் செய்த நிட்டூரமே அதிகம் என்றாகிவிடும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila