கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது: அஜித் பி பெரேரா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாரில்லை. ஆனால் உரிய தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பிரதியமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ”ஒற்றையாட்சி முறையினை பாதுகாப்போம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட்டு நாட்டின் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் செயற்பாடுகளும் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் மக்களின் யோசனைகளுக்கு அமைவாக புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறான புதிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவும் எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரும் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. அரசாங்கத்தின் தீர்மானங்களின் மூலம் நாட்டுக்கு ஏற்றவாறான தீர்வு திட்டங்களையே நாம் முன்வைப்போம்” என்றும் கூறினார்.
Related Post:
Add Comments