பிறக்க முடியாது உருண்டு புரண்டு தத்தளிக்கும் புதிய அரசியலமைப்பைக் கருவறையில் வைத்தே சிதைத்துவிட சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழர்களை பலிக்கடாவாக்க எத்தனிப்பதை மைத்திரி – ரணில் அரசு எவ்வாறு தடுக்கப்போகிறது?
தமிழ் மக்களின் நிகழ்கால நியாயபூர்வமான போராட்டங்களை சிங்கள தேசமும் அதன் தலைமைகளும் ஒரு விளையாட்டாகவே பார்க்கிறார்கள் என்பதை நன்றாக அவதானிக்க முடிகிறது.தமிழ் மக்களின் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளைக்கூட தீர்க்காது அவர்கள் இழுத்தடித்துச் செல்வதில் தமிழ் அரசியல்வாதிகளும் உடன்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
வவுனியாவிலிருந்து அநுரதபுரம் சிறைக்கு மாற்றப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் தம்மை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றுமாறு உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது.
சாட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கவே இவர்களை அநுரதபுரத்துக்கு மாற்றியதாக சட்ட மாஅதிபர் தம்மிடம் தெரிவித்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சாட்சிகள் எனப்படுபவர்கள் வழக்கு விசாரணைக் காலங்களில் மட்டும் நீதிமன்றம் சென்று திரும்புபவர்கள்.
எதிரிகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பளிக்கப்படும்வரை அங்கேயே தடுத்து வைக்கப்படுபவர்கள்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தங்கள் தாய்மொழியில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் உரிமை எதிரிகளுக்குண்டு. ஆதலால், சிங்கள மொழியில் விசாரணை நடைபெறும் அநுரதபுரத்திலிருந்து தங்களை வவுனியாவுக்கு மாற்றுமாறு கேட்கும் அடிப்படை மனித உரிமை மூன்று இளைஞர்களுக்கும் உண்டு என்பது சட்டவாளரான சுமந்திரனுக்குத் தெரியாதிருக்க முடியாது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மூத்த அரசியல்வாதி மட்டுமன்றி நீண்டகால அனுபவம் பெற்ற சட்டவாளரும்கூட. நேரடியாகச் சொல்வதானால் சகல விடயங்களிலும் சுமந்திரனிலும் பார்க்க மூத்தவராக விளங்குபவர்.
இவ்வாறான தகுதிபெற்ற சம்பந்தன் சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியதை வற்புறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதுவரை அதற்கான பதில் ஜனாதிபதியிடமிருந்து அவருக்கு அனுப்பப்படவில்லை.
இங்கு எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில் சட்டம், அரசியல், பொது அறிவு அனைத்தும் கொண்ட சம்பந்தனுக்கு, சாட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையில்தான் கைதிகள் இடம் மாற்றப்பட்டனரென்பது தெரியாதிருக்குமா என்பதுதான்.
அப்படியானால், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு அவர் கடிதம் எழுதினாரா என்ற கேள்வியும் பின்னால் எழுகிறது.
ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய மறுநாள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி வைபவத்தில் அவருக்கருகில் அமர்ந்திருந்த சம்பந்தன் அனுரதபுரம் கைதிகள் விடயம் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லையென்று ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதியுடன் வீதியில் நின்று உரையாடிய வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஒரு குழுவினருடன் கொழும்பு சென்று ஜனாதிபதியைச் சந்தித்து கைதிகள் விடயமாக உரையாடியது பத்திரிகைகளில் படங்களுடன் வெளியானது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதே தினம் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடினர். இரண்டு சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயும் இச்சந்திப்புகளில் பங்குபற்றினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு ஓர் ஏமாற்று நாடகம் என்று கூறி, மறுநாளே வகுப்புகளை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.
ஆனால் ஜனாதிபதியின் கூற்றில் நம்பிக்கை வைத்து, அக்டோபர் 25ம் திகதிக்கு முன்னர் சாதகமான முடிவு வருமெனக் கூறிவந்த சிவாஜிலிங்கம், தாம் ஏமாற்றப்பட்டதை இப்போது உணருகிறார்.
அந்த 25ம் திகதி போய்விட்டது. ஜனாதிபதி எதுவும் செய்யவில்லை. அவரது அலுவலகத்திலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அவர் இரண்டு நாள் விஜயமாக கட்டார் நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
இது இவ்வாறிருக்க, அனுரதபுரம் நீதிமன்றில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று கைதிகளும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் எதிர்பாராத கருத்தொன்றை அரசியல்வாதிகள் பாணியில் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலோ வவுனியாவிலோ லண்டனிலோ ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் இந்த வழக்கை மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற முடியாதென்பதே கைதிகளுக்கு நீதவான் வழங்கிய அரசியல் அறிவுரை.
சிங்கள நீதவான் என்றால் அவருக்கு நீதிமன்றில் அரசியல் பேசும் உரிமையும் உண்டென்பதை இவர் செயலில் காட்டியுள்ளார்.
என்றோ ஒருநாள் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகலாம். அல்லது, பின்கதவால் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆகலாம். அதற்கான கன்னி உரையே இந்த அறிவுரை.
அரசியலமைப்பு அறிக்கை என்ன நிலையில் இருக்கிறது என்பதைச் சந்று நோக்கலாம்.
மூன்று நாட்களுக்கு இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் பல அதிரடி அறிவிப்புகள் அங்குமிங்குமாக பறந்து கொண்டிருக்கின்றன.
அரசியல் நாகரிகமற்ற வகையில் வீதிச் சண்டியர்கள் போன்று வரும் இந்த அறிவிப்புகள் இனவிரோத விதைகளைப் பரப்பி, சமூகத்தில் எதிர்பாராத பல அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடியவையாக காட்சி தருகின்றன.
அரசியலமைப்புக்குத் திருத்தம் தேவையானால் தேர்தல் திருத்தத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும் அமரபுர நிக்காய உட்பட மேலும் சில பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடான கருத்துகளை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர், புதிய அரசியலமைப்பை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார்.
அரசியலமைப்பு விவகாரத்தில் அரசு தனது எல்லை தாண்டக்கூடாது என்று அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு எச்சரித்துள்ளது. மல்வத்த பீடாதிபதி வேலி மீதமர்ந்து இருபுறமும் தலையசைத்துக் கொண்டிருக்கிறார்.
புதிய அரசியலமைப்பினூடாக தமிழருக்குத் தன்னாட்சியைக் கொடுப்பதைவிட, தமிழ் பேசும் ஒருவரை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ நியமிக்கலாமென்று இனவெறி ஆலோசனையை வழங்கியுள்ளார் கோதபாய ராஜபக்ச தலைமையிலான எலிய அமைப்பின் பிரமுகர் மிதகொட அபேதிஸ்ஸ தேரர்.
புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊர்ப்பக்கம் தலைகாட்டக் கூடாதென்று மற்றொரு பிக்குகள் கூட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிக்குகளுக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்று இடித்துக் காட்டும் தோரணையில் சற்று வித்தியாசமான இரண்டு குரல்கள் வெளிவந்துள்ளன.
புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால், நாடாளுமன்றத்தின்மீது குண்டு வீசப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்த அணியின் பிரமுகருமான விமல் வீரவன்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது மிகவும் அபாயகரமான ஓர் அறிவிப்பு.
1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா – ராஜிவ் காந்தி ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், அதேயாண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.ஆர். தலைமையில் அரச தரப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றபோது குண்டுத்தாக்குதல் ஒன்ற நடத்தப்பட்டது.
மாத்தறை மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபயவிக்கிரமவும், நாடாளுமன்ற உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அமைச்சர் அத்துலத் முதலி படுகாயமடைந்து சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்படியான ஒரு தாக்குதலையே விமல் வீரவன்ச இப்போது அறிவித்திருப்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எடுத்துக் கூறியதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
வன்னி யுத்தத்தின்போது பிரதான தளபதிகளில் ஒருவராகவிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, நாட்டின் துரோகிகள் கொல்லப்படுவரென முன்னறிவிப்புக் கொடுத்துள்ளார்.
அரசியலமைப்பை ஆதரித்து நாட்டைப் பிளவுபடுத்த முனைபவர்களையே தேசத்துரோகிகள் என்று அடையாளப்படுத்தியிருக்கும் இவர், இத்துரோகிகளின் மரணச் சடங்குகளில் மரியாதையாக எவரும் நடந்து கொள்ளக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் பிரதானியான கமால் குணரத்ன, கம்பகாவில் கோதபாய தலைமையிலான கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இந்த அறிவிப்பைக் கொடுத்தார்.
இதனூடாக கோதபாய ராஜபக்ச என்ன கொள்கையின் அடிப்படையில் எலிய அமைப்பை உருவாக்கியுள்ளார் என்பது நன்கு தெரிகிறது.
புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பல கோணங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்களே வருகின்றன. அதேசமயம் சிங்கள பௌத்த இனவெறிக் கூட்டம் புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதென்ற பெயரில் தமிழ் மக்கள்மீது இனவெறியைக் கட்டவிழ்த்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது.
இவர்களின் ஆரம்பமே இப்படியாக இருக்குமாயின், அடுத்த கட்டங்கள் எத்தகைய வீச்சைக் கொண்டவையாக இருக்குமென்பதை அனுமானிக்கலாம்.
இதனைத்தான் மைத்திரி – ரணில் அரசும் மறைமுகமாக ஆதரிக்கிறதோ என்ற ஐயமும் எழுகின்றது.
பிறக்க முடியாது உருண்டு புரண்டு தத்தளிக்கும் புதிய அரசியலமைப்பை, கருவறையில் வைத்தே சிதைத்துவிட சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சிகளுக்கு, தமிழர்களைப் பலிக்கடாவாக்க எத்தனிப்பதை மைத்திரி – ரணில் அரசு எவ்வாறு தடுக்கப்போகிறது?
தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது புதுவடிவில் வேகம் கொள்ளும் இனவாதத்தை உணர்ந்து தெளிவு பெற்று உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கத் தவறின், குண்டுகளைச் சுமந்து துரோகிப் பட்டத்தையும் ஏற்றுக் கொள்ள நேரிடலாம்.