அரசியல் கைதிகளின் விவகாரத்தில் தெற்கு மற்றும் வடக்கு அரசியல் தலைமைகள் தமக்கேற்ற அரசியல் சித்துவிளையாட்டுக்களினை அரங்கேற்றுவதாக கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.இலங்கை அரசு ஒருபுறம் தெற்கினில் அரசியல் செய்துகொண்டிருக்க மறுபுறம் அரசின் பங்காளிகளாக இருக்கும் கூட்டமைப்பு தனது நலனிற்கேற்ற அரசியலை செய்த கொண்டிருப்பதாக அரசியல் கைதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்திருக்கும் சம்பந்தன் மறுபுறம் மைத்திரியுடன் தீபாவளி பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கிறார்.இரண்டு தடவைகளாக அத்தகைய நிகழ்வினில் மைத்திரியுடன் கலந்து ஒரே மேசையினில் அமர்ந்திருக்கும் சம்பந்தர் க உரையாட சந்தர்ப்பம் சரியில்லையென நினைத்தாரோவென அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமது போராட்டம் தொடாபாக யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் டெலோ அமைப்பு குடும்பத்தவர்கள் சகிதம் நடத்திய சந்திப்பு போன்றவை தோல்வியில் முடிவடைந்ததாகவே அரசியல் கைதிகள் கருதுகின்றனர்.அரசு வெளி உலகிற்கு ஒரு செய்தியினையும் தெற்கிற்கு இன்னொரு செய்தியினையும் சொல்லி இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரிய ஜனாதிபதி நீதி அமைச்சரும் சட்டமா அதிபரும் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேசிவிட்டு முடிவு சொல்கிறேன் என்றிருக்கிறார்.
இந்நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியின் வாக்குறுதியை துரித படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் யாழ் பல்கலயின் அனைத்து பீடங்களினதும் மாணவ ஒன்றியங்கள் இணைந்து கால வரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு செய்வதாக தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுக்குமிடையிலே நடைபெற்ற சந்திப்பில் ஐனாதிபதி 25ம் திகதி வரை கால அவகாசம் கோரிய நிலையிலேயே இவ் வகுப்பு புறக்கணிப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை கடந்த 16 ஆம் திகதி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கையான பதில் கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரித்திருந்தனர்.

கடந்த காலங்களினில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் போராட்டம் அதிக தாக்கத்தை செலுத்தியிருக்கவில்லை.எனினும் இப்போது ஒட்டுமொத்த மாணவர்களிடையே 41 விழுக்காடு தென்னிலங்கை மாணவர்கள் கற்றுவருகின்ற நிலையினில் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்படுகின்றமை நிச்சயம் தாக்கத்தை செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.