உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அவர்கள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெரும் கருசனை எடுத்ததாகத் தெரியவில்லை.
இன்று 29ஆவது நாளாக அவர்கள் மூவரும் ஆகாரத்தை ஒறுப்புச் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை கடுமையானதல்ல.
வவுனியா நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த தமது வழக்கை அநுராதபுரம் நீதி மன்றுக்கு மாற்ற வேண்டாம். எங்களை வவுனியா நீதிமன்றிலேயே தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.
தமிழ் மொழியில் வழக்கும் விசாரணையும் நடப்பதே நல்லது என்பதுதான் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் கோரிக்கை.
அவர்களின் கோரிக்கை நியாயமானது. இருந்தும் அது விடயத்தில் நல்லாட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
29 நாட்களாக உணவொறுப்புப் போராட்டம் நடத்தும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,
நொண்டிச்சாட்டுக்களை முன்வைப்பது நல்லாட்சியின் கபடத்தனம் எனலாம்.
நீதி அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார். வெளிநாட்டுக்கு சென்றுள்ள சட்டமா அதிபர் நாடு திரும்ப வேண்டும் என்றெல்லாம் கூறுவது எந்தவகையிலும் நியாயமானதல்ல.
தங்களை விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல் கைதிகள் கேட்கவில்லை. மாறாக, வவுனியா நீதிமன்றில் நடந்து கொண்டிருந்த வழக்கை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றாதீர்கள் தொடர்ந்தும் வவுனியா நீதிமன் றிலேயே எங்களுக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே மூன்று தமிழ் அரசி யல் கைதிகளினதும் கோரிக்கையாகவுள்ளது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவ தற்கு நீதியமைச்சர் இல்லை, சட்டமா அதிபர் வெளிநாடு சென்றுவிட்டார் என்று கூறுவது இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற உன்னதமான பதவிக்குரிய பதிலா? என்பதை அவர் சிந்தித்தாக வேண்டும்.
தமிழ் மக்கள் மீது விசுவாசம் உள்ளதாகக் காட்டுவதென்பது வேறு, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதென்பது வேறு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சாதுவான மதத் தலைவர் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
பிரச்சினைகளைத் தீர்க்காமல் காமராஜரின் பாணியில் ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறி விடயங்களைத் தட்டிக் கழிக்கிறார். இதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்பதுதான் உண்மை.
இப்போது அந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
29 நாட்களாக அவர்களின் உணவொறுப்புப் போராட்டம் தொடர்கிறது. மிகச் சுலபமாக தீர்க்கக்கூடிய ஒரு விடயத்தை சிக்கல்படுத்திக் கொள்வது தமிழ் மக்களின் விடயத்தில் நல்லாட்சி நடிக்கிறது என்பதற்கான சான்றாதார மாகும்.
தவிர, மூன்று தமிழ் அரசியல் கைதிகளில் யாருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதன் பின்னர் இரா.சம்பந்தர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போகும்.
தமிழ் மக்களின் ஆத்திர மேலீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதே இருக்கும் என்பதால் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தரும் இது விடயத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.