வவுனியா உள்ள கொக்கச்சான்குளம் என்ற தமிழர்களுக்குச் சொந்தமான வயல்காணிகள், கலாபோவஸ்வெவ என்ற சிங்களக் கிராமமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனிவனால் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது
இவ்வாறு உருவாக்கப்பட்ட, சிங்களக் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பெயரைக் கொண்ட, சிறிய சிங்கள உப கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நாமல்புர என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லுாரியில் நாளை சனிக்கிழமை பாரிய நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை சனிக்கிழமை வவுனியாவுக்கு பயணம் செய்யவுள்ளனர்.
நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்த பின்னர், ஐயாயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் கையளிக்கவுள்ளனா். சிங்கள கிராமமாக பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ள கலாபோவஸ்வெவ மற்றும் சிதம்பரபுரம் ஆகிய கிராம மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
சிதரம்பரபுரத்தில் 206 தமிழ் குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது. இந்தக் குடும்பங்கள் பாரம்பரியமாக அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் கலாபோவஸ்வெவ கிராமம் திட்டமிட்டு படையினரின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குடியேற்றமாகும் என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் அழிக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொக்கச்சான்குளத்தை கலாபோவஸ்வெவ என பெயர் மாற்றி, அம்பாந்தோட்டை, காலி ஆகிய தென் மாகாணங்களில் வாழ்ந்த மூவாயிரத்தி 500 சிங்களக் குடும்பங்களை அழைத்து வந்து குடியமர்த்தினார்.
அவ்வாறு குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களுக்குரிய காணிகளின் உறுதிப்பத்திரங்களை நல்லாட்சி அரசாங்கம் தயாரித்து கையளிக்கவுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் மகன், நாமல் ராஜபக்சவின் பெயரில் உள்ள நாமல்புர என்ற கிராமத்தையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுள்ளதாக தகவல் கிடைக்கிறது
நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள கொக்கச்சான்குளத்தில் நெடுங்ககேணியில் வாழும் தமிழர்களின் வயல்களும் விவசாயக் குளங்களும் இருந்தன. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் அந்த வயல்காணிகளில் விவசாயம் செய்வதற்கு படையினர் தடைவிதித்தனர்.
தற்போது மூவாயிரத்தி 500 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்ட்டதால் நெடுங்கேணியில் வாக்காளர் விகிதாசாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பல தடவைகள் நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பித்து கொக்கச்சான்குளத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியது. அதன் பாரம்பரிய பெயரையும் சிங்கள பெயராக மாற்ற வேண்டாம் எனவும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் படையினரின் ஒத்துழைப்புடன் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு இன்று நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்பத்திரம் வழங்கவுள்ளது. ஆகவே தமிழர் பிரதேசங்களை கையாளும் விடயத்தில் தென்பகுதி அரசியல் கட்சிகள் ஒருமித்த கொள்கையை பின்பற்றுகின்றன
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் கிராமத்திலும் சுமார் நான்காயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கரைத்துரைப்பற்று பிரதேச செலயகத்துடன் இணைந்திருந்த கொக்கிளாய் பகுதி, தற்போது தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட்டுள்ளது.
கொக்குளாய் பிரதேசத்திற்கென அடுத்த ஆண்டு தனியான பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். மகாவலி எல் வலையம் என்ற பிரிவுக்குள் கொக்குளாய் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், அங்கு சிங்கள பாடசாலைகள், புத்தர் கோவில்கள் கட்டப்பட்டு பூர்த்தியடைந்துள்ளன
கொக்குளாய் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள், யுத்தம் காரணமாக 1984- 85ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த மக்களை மீள் குடியேற்றாமல், சிங்கள மக்கள் படையினரின் ஒத்துழைப்புடன் குடியேற்றம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்
Add Comments