யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சகோதரர்களுக்கு அன்பு வணக்கம்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் நீங்கள் காட்டும் கரிசனை கண்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் நெகிழ்ந்துபோயுள்ளனர்.
தமிழினத்தின் உரிமைப் போராட்டத்திலும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்பதை மீளவும் நீங்கள் உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் ஒரு கருத்தை முன்வைத்தால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்கின்ற ஒரு பெரும் கலாசாரம் தமிழினத்தில் மட்டுமே உண்டு.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர்களாகிய நீங்கள் எப்போதும் எந்த விடயத்திலும் நிதானமாகவும் தெளிவாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலின்போது யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சிலர் செய்த கபடத்தனங்கள் பல்கலைக்கழக சமூகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வாறு ஏற்பட்ட அந்தக் கறையை நீக்குகின்ற தார்மீகப் பொறுப்பு உங்களுடைய தாகும். அதனை நீங்கள் செய்கிறீர்கள் என்ப தையும் உணர முடிகின்றது.
இந்த வகையில், தொடர்ச்சியாக உண்ணா விரதமிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளின் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் நீங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை ஒரு பெரும் திருப்புமுனை எனலாம்.
தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பதற்காக எங்கள் இனம், எங்கள் மக்கள் படும் துன்பம் கண்டு நாம் பேசாதிருந்துவிடமாட்டோம்.
நாமே முன்னின்று ஜனாதிபதியைச் சந் தித்து நிலைமையை எடுத்துரைப்போம் என்று களமிறங்கி ஜனாதிபதியையும் சந்தித்து நிலை மையை எடுத்துரைத்த உங்கள் மன உறுதி கண்டு இறும்பூதெய்தாமல் இருக்க முடியாது.
எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண வர்கள் துணிச்சலாக எடுத்த தீர்மானத்தைப் பார்த்தீர்களா! என்று நெஞ்சை நிமிர்த்தக்கூடிய வகையில் உங்கள் முடிவுகள் அமைந்துள்ளன.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு ஐந்து நாட்கள் அவகாசம் தருமாறு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தங்களிடமும் அரசியல்கைதி களின் உறவினர்களிடமும் கேட்டுக் கொண்ட தாக அறிய முடிகின்றது.
ஐந்து நாள் அவகாசம் என்பது ஒரு பெரிய காலம் அன்று. எனவே ஜனாதிபதி மைத்திரியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அதனை ஏற்று அவரின் முடிவுக்காகக் காத்திருக்கின் றோம் என்பதாக நீங்கள் எடுக்கும் முடிவு அமையுமாயின் அது ஜனாதிபதி மட்டத்தில் ஒரு சாதகமான தீர்மானம் வெளிவருவதற்கு வாய்ப்பாகலாம்.
தவிர, ஐந்து நாட்களின் பின்னர். ஜனாதிபதி யால் தரப்படும் முடிவில் திருப்தியில்லை என் றால் அது விடயத்தில் நீங்கள் கூடி ஒரு முடிவு எடுப்பது நியாயமானது என்றாகும்.
இதற்கு மேலாக உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல்கைதிகள் தங்கள் உண்ணா விரதத்தின் இறுக்கத்தை சற்றுத் தளர்த்தி ஜனாதிபதியின் முடிவுக்கு இடம்கொடுக்குமாறு நீங்கள் கேட்க வேண்டும்.
ஏனெனில் அவர்களின் உடல்நிலையில் எந் தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும்.