யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்ற மர்மம் நேற்று இரவு வரையில் துலங்கவில்லை. போதைக் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் உலாவுகின்றன.
ஆனால், சம்பவத்துக்கான காரணமோ குற்றவாளிகள் தொடர்பான தகவல்களோ திட்டவட்டமாக வெளிவரவில்லை. படைகளின் புலனாய்வுக் குழுக்கள் இந்தக் கொலையுடன் தொடர்புபட்டுள்ளன என்கிற ஊகமும் கூட உலாவுகின்றது.
கொலையை நேரில் கண்ட சாட்சியான மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர், சுட்டவர்களில் ஒருவரைத்தான் பொலிஸ் நிலையங்களில் கண்டிருக்கிறார் என்றும் அவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் பலரிடம் கூறியிருக்கிறார்.
ஆனால், அது பற்றி விசாரணை நடப்பதாகவோ சந்தேகநபர்கள் யாராவதுஇனங்காணப்பட்டிருப்பதாகவோ எந்தப் பகிரங்கத் தகவல்களும் இதுவரையில் கிடையாது.
இந்தச் சமயத்தில்தான் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் நினைவில் ஊசலாடுகிறது. பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலை யில், அவர்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்தார்கள் என்றே பொலிஸார் ஆரம்பத்தில் தகவல்களை வெளியிட்டார்கள்.
இப்போது மணியந்தோட்டக் கொலையில் புலனாய்வா ளர்களின் தொடர்புகுறித்து அரசல் புரசலாகக் கதைகள் அடி படும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் கொலை யின் போது பொலிஸார் நடந்துகொண்ட விதத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பது தவிர்க்க முடியாதது.
அத்தோடு எங்கேயோ இடிக்கும் மற்றொரு விடயம், நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், கொக்குவிலில் பொலிஸார் இருவர் வாளால் வெட்டப்பட்டபோதும் குற்றவாளி களைப் பிடிப்பதில் பொலிஸார் காட்டிய வேகமும் அவசரமும் இந்தக் கொலையில் ஏன் இல்லை என்பது தான்.
எந்தக் கொலையாக இருந்தாலும் சட்டம் ஒழுங்குக் காவலர்கள் அதனை ஒரே மாதிரியாகத்தானே அணுகியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் சாட்சிகள் தெளிவான தகவல்களை வழங்கினால் தான் சந்தேகநபர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போன்று பொலிஸார் இந்த வழக்கில் நடந்து கொள்வது நியாயமான சந்தேகங்களை எழுப்புகிறது.
அரியாலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞன் மற்றும் அவருடன் கூடச் சென்றவர் என இருவருமே குற்றப் பின்னணி கொண்டவர்கள் அல்லர் என்கின்றன தகவல்கள். அவர்கள் மீது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளோ, நீதிமன்றங்களில் வழக்குகளோ இல்லை.
அப்படியிருக்கும்போது அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதும், அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்கிற கதைகள் பரப்பப்படுவதன் பின்னணியும் கவனிக்கப்படவேண்டியதே!
குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்பதால் உயிர் வாழத் தகுதியற்றவர்கள் என்கிற மறைமுகமான நியாயப்படுத்தல் இதற்கூடாக சமூகத்தின் ஏனைய கூறுகளுக்குக் கடத்தப்படுகின்றதா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
ஏனெனில் கொலை நிகழ்ந்து இரண்டு நாள்கள் கடந்த பின்னரும்கூட மனித உரிமை அமைப்புகளோ, பொது அமைப்புகளோ எதுவும் இந்தக் கொலை தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. அரசியல் கட்சிகளும் வாய்மூடி மௌனிகளாகவே இருக்கின்றன.
குற்றங்களோடு தொடர்புபட்டவர்கள் என்றால் கேட்டுக் கேள்வியின்றிக் கொல்லப்படலாம் என்பதுதான் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? இது மிக மிக ஆபத்தான போக்கு. அதற்கு எதிராக ஒட்டுமொத்தச் சமூகமும் கிளர்ந்து எழவேண்டும்
Add Comments