வெளிவந்துள்ள புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை நோயை அறிந்ததாகவோ தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை எப்போதும் தோல்வியில்தான் முடியும்.
மேற்கண்ட எச்சரிக்கையை எழுத்து வடிவில் சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்ட நான்கு வரிகள் பின்வருமாறு:
இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது. எதனைப் புறக்கணித்து நாம் எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்போது இடம்பெறும் தொடர்நிகழ்வுகளைப் பார்க்கையில், முதலமைச்சர் தெரிவித்த கருத்துகளை ஒத்ததாகவே காரியங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது.
கடந்த மாதத்தின் இறுதி இரண்டு நாட்களும் இந்த மாதத்தின் முதலிரு நாட்களுமாக மொத்தம் நான்கு நாட்கள், இலங்கை நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாறி இந்த அறிக்கைமீது விவாதம் நடத்தியது.
அனேகமாக சகல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் இதில் உரையாற்றினர்.
கூட்டு எதிரணிக்குத் தலைமை தாங்கும் மகிந்த ராஜபக்சவும் இதில் பங்குபற்றி உரையாற்றினார்.
மகிந்தவின் கூட்டு எதிரணியினர் நாடாளுமன்றத்துக்குள் முதல்நாள் அமர்வில் பங்குபற்றாது, பதாதைகள் ஏந்தியவாறு வெளியில் நின்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்துக்குக் குண்டு வைத்து தகர்ப்போம் என்று எச்சரித்த விமல் வீரவன்ச, கெகலிய றம்புக்வெல மற்றும் உதய கம்மன்பில, தினே~; குணவர்த்தன இதில் பங்கேற்ற முக்கிய எதிரணியினர்.
ஆனால் மதியபோசன நேரத்தில் நாடாளுமன்ற போசனசாலைக்குச் சென்று அரைக்கட்டணத்தில் வழங்கப்படும் அறுசுவை உணவையும், பழச்சாறு, கேக் போன்றவைகளையும் அருந்த மறக்கவில்லை.
கொழும்பின் அனேகமான ஊடகங்கள் இவர்களின் அரைக்கட்டண ஆசையை எள்ளி நகையாடும் வகையில் செய்திகளை வெளியிட்டன.
இது ஒருபுறமிருக்க, இடைக்கால அறிக்கை தொடர்பாக அரசமைப்பு நிர்ணய சபையில் நிகழ்த்தப்பட்ட சில உரைகளைக் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றி குறிப்பிட்டதை முதலில் பார்ப்போம்:
இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு அல்லது மாகாணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவற்றில் எதையென்றாலும் நாட்டு மக்கள் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே செய்ய முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இதனை மறுவார்த்தையில் கூறுவதனால், நாடு தழுவிய சர்வஜன வாக்கெடுப்பில் இதற்கு அனுமதி கிடைக்க வேண்டுமென்பதாகும்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை இது சாத்தியமாகாது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.
ஒற்றையாட்சி மற்றும் பௌத்தசாசன பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் கருத்து வெளியிடுகையில் மகாசங்கத்தினரும், மகிந்தவின் கூட்டு எதிரணியினரும் போலவே ஜனாதிபதியும் தாமும் இவ்விரு விடயங்களிலும் ஒத்த கருத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். (இதுதான் சிங்கள பௌத்த வெறித்திமிர் என்பதை புரிந்து கொள்வோமாக).
ஒற்றையாட்சி மற்றும் பௌத்தமத பாதுகாப்பு விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் நிலைப்பாடு என்னவென்பதை, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரெரா தமதுரையில் பின்வருமாறு விளக்கமாக முன்வைத்தார்:
இரா சம்பந்தனின் தலைமைத்துவத்துக்குப் பின்னர் கூட்டமைப்பினர் ஒற்றையாட்சி (ஏக்கிய) என்ற சொற்பதத்தையோ பௌத்தமத பாதுகாப்பையோ அப்படியே ஏற்றுக்கொள்ள ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், பிரச்சனைத் தீர்வுக்கு சம்பந்தன்தான் எமக்குக் கிடைத்த கடைசி ஆயுதம் என்றும் சொன்னார்.
இரா சம்பந்தனை விட்டால் வேறெந்தத் தமிழரும் ஒற்றையாட்சியையும் பௌத்த உயர் பாதுகாப்பையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற அர்த்தமே இரா சம்பந்தனைக் கடைசி ஆயுதமென்று டிலான் பெரேராவைக் குறிப்பிட வைத்தது.
இந்த உரையை விவாதத்தில் பங்கேற்ற கூட்டமைப்பு உறுப்பினர் எவரும் ஆட்சேபிக்கவில்லை என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
இதன்பின்னர் வழமையான தமிழரசுப் பாணியில் இரா சம்பந்தன் உரையாற்றினார். தமிழரசுப் பாணியென்று இங்கு குத்திட்டுக் கூறுவது எதனையெனில், கடுந்தொனியில் எச்சரிக்கை செய்யும் போக்கில் நீட்டி முழக்கி உரையாற்றுவது.
உள்நாட்டில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசாங்கம் முன்வராவிடின் விளைவுகள் விபரீதமாகும். சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்குமென்று சம்பந்தன் எச்சரிக்கை செய்ததாக ஓர் ஊடகம் இவரது உரைக்குத் தலைப்பிட்டுள்ளது.
இதே அமர்வில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க உரையாற்றுகையில், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்குமிடையிலேயே போர் நடைபெற்றது. ஆனால் எதிர்வரும் காலங்களில் இனங்களுக்கிடையில் போர் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்தது யதார்த்தத்தை உணர்ந்த ஒன்றாகவிருந்தது.
புதிய அரசமைப்பு அறிக்கை தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அதில் குறிப்பிடப்படாதவைகளை விபரித்து, விளங்கிக் கொள்ள முடியாத குதர்க்கமான உரையொன்றை நிகழ்த்தினார்.
வடக்கு கிழக்கு இணைப்பில்லை என்று அறிக்கையில் கூறப்படவில்லையென்றும், படிப்படியாக எல்லாம் கிடைக்குமென்றும் பூசாரி ஆருடம் கூறுவதுபோல் சம்பந்தா சம்பந்தமற்ற உரையை இவர் நிகழ்த்தியது வேடிக்கையாக இருந்தது.
அமைச்சர் மனோ கணேசனின் உரை இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.
எதிர்க்கட்சித் தலைவரை வெறுங்கையுடன் வடக்கு கிழக்குக்கு அனுப்ப வேண்டாமென அரசாங்கத்திடம் இவர் வேண்டுகோள் விடுத்தார்.
பௌத்த துறவிகள் போன்று பிச்சா பாத்திரத்துடன் இரா சம்பந்தன் சிங்களத் தலைவர்கள் முன்னால் நிற்பது போன்ற ஒரு சித்தரிப்பாக இவரது உரை காட்சி கொடுத்தது.
தனியான இராச்சியக் கொள்கையிலிருந்து தமிழர் ஒருவர், ஒன்றிணைந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறந்ததொரு உதாரணமென்றும் மனோ கணேசன் தெரிவித்ததற்கு அர்த்தமுள்ள மறைபொருள் உண்டு.
அரசாங்கம்தான் இவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தது என்பதையும், அதனாற்தான் ஒற்றையாட்சியை இவர் காக்க நேர்ந்தது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது அமைச்சரின் கூற்று.
இலங்கையைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று இரா சம்பந்தனைக் கூற வைக்க வேண்டாமென ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வேண்டுகோள் கொஞ்சம் ஷஓவராக| இருந்தது.
இவைகள் இப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்க, அரசமைப்பு தொடர்பான தற்போதைய நிலைமை என்னவென்பதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதக் கடைசியில் உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சகல கட்சிகளும் தங்கள் இருப்பை நிரூபிக்க குடுமிபிடி சண்டையில் இறங்க கோதாவைத் தயார் செய்து வருகின்றன. இதனை மனதில் வைத்துக் கொண்ட பிரதமர், அடுத்தாண்டு நடுப்பகுதியின் பின்னரே வழிகாட்டிக் குழுவின் அடுத்த அறிக்கை தயாரிக்கப்படும் சூழ்நிலை உண்டு என்று அறிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றிய முன்னெடுப்புகள் தொடர்பில் சர்வகட்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் மாநாடுகளை நடத்ப்பபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் செயலன்றி வேறொன்றுமில்லை.
மறுதரப்பில், சிங்கள வகுப்புவாத இனவிரோத பௌத்த ஏகாதிபத்தியவாதிகள் புதிய அரசமைப்புக்கு எதிராக தீவிர பரப்புரையை மேற்கொள்ள, ஜனாதிபதி போதிய அவகாசம் வழங்குவதாகவே இதனைப் பார்க்க முடிகிறது.
போகிற போக்கைப் பார்க்கையில், எஞ்சியிருக்கும் மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு சாத்தியமாகும் சாத்தியம் இல்லையென்றே கூறலாம்.
மொத்தத்தில், அரசாங்கமும் மகிந்தவின் கூட்டு எதிரணியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவாறு புதிய அரசமைப்பை இல்லாமற் செய்யும் முயற்சியில் மறைமுகமாக இணைந்து இயங்குவது தெரிகிறது.
புதிய அரசமைப்பை கருச்சிதைவு செய்வதில், இரு சிங்கள அணியினரும் கடும்போட்டியில் இறங்கியுள்ளனர்.