அரியாலைப்பகுதியினில் குடும்பத்துடனான தற்கொலை விவகாரத்தை தமிழ் அரசியல் தலைமைகள் அதிலும் பெண் அமைச்சர்கள் கண்டுகொள்ளாதிருக்கின்றமை விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தினில் மத்திய அரசின் அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சராக அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் உள்ளனர்.உயிரிழந்த குழந்தைகளிற்கு நேரினில் சென்று அஞ்சலி செலுத்தக்கூட தயாராக இல்லாத இவர்கள் இருவருமே சிறுவர் நலன்கள் தொடர்பாக அமைச்சர்களாக இருக்க தகுதியுள்ளவர்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை அறிக்கை அரசியலை மட்டுமே நடத்தும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் போன்றவர்கள் அதே அரியாலைப்பகுதியினில் தனது அமைச்சு அலுவலகத்தை வைத்துக்கொண்டு நம்பவைத்து ஏமாற்றியவர்கள் சுதந்திரமாக வாழும் நிலையில் ஏமாற்றப்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றமை வேடிக்கையானது.
உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளமையானது இருந்திருக்க வேண்டியவர்கள் இல்லாததன் அருமையை உணர்த்தியுள்ளதான அனந்தி சசிதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையினில் நம்பிக்கை மோசடியால் பாதிக்கப்பட்ட இந்த இளம் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலான பொறிமுறைகள் இல்லாத நிலையே இவர்களை இவ்வாறான விபரீத முடிவை எடுக்கத்தூண்டியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும். இறந்தவர்கள் மீண்டுவரப்போவதில்லை. அவர்களை நம்பவைத்து ஏமாற்றி இன்று சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
ஏமாற்றிய தொகையை மீட்டு இறந்தவர்கள் பெயரில் நம்பிக்கை மோசடியின் பெயரால் சுமத்தப்பட்டிருக்கும் கடனை அடைப்பதன் மூலம் அவர்களின் ஆத்மாக்களையாவது ஆறுதல்படுத்த முடியும்.அத்துடன், இவ்வாறான மோசடியாளர்கள் மீண்டும் எமது மண்ணில் தலையெடுக்காது தடுக்க முடியும்.ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்ட தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேனென மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய அமைச்சர் விஜயகலாவோ இதுவரை வாய் கூட திறக்காதேயிருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.