பேர்வழிகளுக்கு நாம் கூறுவது இது தான்! விக்னேஸ்வரன் ஆதங்கம்

கடந்த ஆண்டுகளில் எமது வடமாகாண சபையின் முன்னேற்றம் சம்பந்தமாக நாங்கள் எந்தவித விபரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இல்லாததையும் பொல்லாததையும் அவன் இவன் என்று எவனெவனோ சொல்லிவைக்க அவற்றைப் பத்திரிகைகள் எம்மிடம் கேட்டு உண்மை அறியாது பிரசுரித்ததால் பாரிய இடர்களை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தது.
கௌரவ டிலான் பெரெராவின் அண்மைய கூற்றும் இவ்வாறான தவறான தகவல்களை முன்வைத்தே வெளிவந்தது.
இந்த வருடத்தில் நாம் அவ்வாறான முன்னைய சம்பவங்களை மனதில் எடுத்து எமது 2017ம் ஆண்டுக்கான மூலதன முன்னேற்றத்தை வருடத் தொடக்கத்திலேயே சுருக்கமாகக் கூறிவைக்கின்றோம்.
2017ம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து ரூபா 6,013.48 மில்லியன் மத்திய திறைசேரியினால் பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
இதில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை மத்திய திறைசேரியினால் வடக்குமாகாண திறைசேரிக்கு விடுவிக்கப்பட்ட கட்டு நிதி ரூபா 5,399.20 மில்லியன் மட்டுமே ஆகும்.
இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90 வீதம் ஆகும். கிடைக்கப் பெற்ற ரூபா 5,399.20 மில்லியனும் (முழுமையாக 100வீதம்) அமைச்சுக்கள் திணைக்களங்களினூடாக செலவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97 சதவிகிதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே 2017ஆம் ஆண்டின் மூலதன அபிவிருத்திவேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூபா 614.28 மில்லியன் மத்தியதிறை சேரியினால் வடக்கு மாகாணத்திற்கு இன்னமும் விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடாக அபிவிருத்தித் திட்டங்களுக்கென வடக்குமாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவுமையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காகவும் (TSEP), சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் (HSDP) ரூபா.675 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் மத்திய திறைசேரியினால் 2017 டிசம்பர் வரை விடுவிக்கப்பட்ட கட்டுநிதி ரூபா 612 மில்லியன் ஆகும். இது மொத்த ஒதுக்கீட்டின் 91 வீதம் ஆகும்.
இந்த ஒதுக்கீடு முழுமையாக செலவுசெய்யப்பட்டு 97 வீதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே மொத்த ஒதுக்கீட்டில் ரூபா 63 மில்லியன் மத்தியதிறை சேரியினால் இன்னமும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.
இதேவேளை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் ரூபா.207.11 மில்லியன் ஒதுக்கீடு வெவ்வேறு காலப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது.
இதில் 64 வீதமான கட்டுநிதி அதாவது ரூபா 131.65 மில்லியன் டிசம்பர் மாதம் வரைவிடுவிக்கப்பட்டிருந்தது. இதில் ரூபா 75.16 மில்லியன் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்திலிருந்து (ONUR) வடக்கு மாகாணத்திற்கு விடுவிக்கப்படவேண்டும்.
இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஆகவே கொடுத்த பணத்தைநாம் செலவழிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் பேர்வழிகளுக்கு நாம் கூறுவது இது தான்.
நாம் கொடுத்த பணத்திற்கு மேலாகவும் உரியவாறு இது வரையில் செலவழித்துவிட்டோம். ஆனால் அரசாங்கம் தான் எமக்கு உறுதியளித்த மொத்தப் பணத்தையும் தராதிருக்கின்றது.
ஆகவே அரசாங்கத்திடம் ஏன் எமக்குரிய பணத்தை இன்னமும் கொடுக்கவில்லை என்று இந்தப் பேர் வழிகள் கேட்கவேண்டும்.
மேலும் 2016ஆம் ஆண்டு நாங்கள் பெறவேண்டிய பணத்தில் ரூபா 1050 மில்லியன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அரசாங்கத்தால் எமக்கு கொடுத்து முடிக்கப்பட்டது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila