முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ நடவடிக்கை!


Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;
முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.
இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.
அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.
1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila