கிராமத்துப் பழமொழிகளின் தத்துவம் மிகவும் கனதியானவை. அவை கூறி நிற்கும் பொருள் நம் வாழ்வியலுக்கு உதவக்கூடியவை.
நம் மூதாதையர்கள் பழமொழிகளின் பொருள் உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்தனர். ஆனால் இப்போதெல்லாம் அந்நிலைமை இல்லை.
புதிய தலைமுறையில் பழமொழி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதாக நிலைமை மாறிற்று.
எனினும் நம் பழந்தமிழாம் தமிழ் மொழியின் பெருமையில் பழமொழிக்கு முக்கியமான பங்கு உண் டென்பதால், பழமொழி பற்றி நம் இளம் சந்ததியினர் கவனம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க, நரையன் நாற்பது செங்காரி முப்பது என்றொரு பழமொழி நம் கிராமத்து வழக்கில் உண்டு. இங்கு நரையன் என்பதும் செங்காரி என்பதும் எருது மாடுகளைக் குறிக்கும்.
நரையனும் செங்காரியும் ஒரே தரம் கொண்டவையாக இருந்தாலும் ஒன்றின் விலையைக் கூட்டி மற்றையதன் விலையைக் குறைத்துக் கூறுவதன் மூலம் இரண்டு மாடுகளுக்கும் சரியான விலை நிர்ணயம் செய்துள்ளதான நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் நோக்கம்.
உண்மையில் இரண்டு மாடுகளினதும் விலை தலா முப்பது ரூபாயாக இருந்த போதிலும் நரையனுக்கு நாற்பது என்றும் செங்காரிக்கு முப்பது என்றும் கூறுவதனூடாக வாங்குபவரைத் திருப்தியடையச் செய்வதுடன் மறுவார்த்தை பேசாமல் தடுப்பது ஒரு நோக்கம்.
அடுத்தது, மாட்டை வாங்குபவர் நரையனை நாற்பதில் இருந்து முப்பது ஆக்குங்கள் என்று கேட்பார். இச்சந்தர்ப்பத்தில் இரண்டு மாடுகளையும் 30 ரூபாய் என்ற சமவிலையில் விற்றுவிட முடியும்.
இதற்காகவே இவ்வாறான யுக்தி கையாளப் பட்டது. அது சரி; நரையன் நாற்பது, செங்காரி முப்பது என்ற பழமொழி இப்போது எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம்.
அவ்வாறு கேட்டால் எல்லாம் காரணத்தோடு தான். அடுத்த ஆண்டின் முற்பகுதியில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவரவிருக்கின்ற புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையையும் தரப்போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
அப்படியிருந்தும் வெளிவரவிருக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குவது என்று தமிழ்த் தரப்பு முடிவு செய்து விட்டது.
இவ்வாறு முடிவு செய்தாலும் அதனை தமிழ் மக்கள் ஏற்க வேண்டுமல்லவா? இதனை ஏற்கச் செய்வதற்கானதுதான் நரையன் நாற்பது செங்காரி முப்பது என்ற திட்டம்.
ஆம், அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் என்ற ஒன்றை அரசியலமைப்புக்குள் செருகுவது; இதனை தமிழ்த் தரப்புக்கள் எதிர்ப்பது; தமிழ்த் தரப்புக்கள் எதிர்ப்பதால், அதனை நீக்குவது.
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நீக்குவதாக அறிவிக்கப்பட்டதால், ஏனைய சட்ட மூலங்களை தமிழ்த் தரப்புக்கள் ஏற்றாக வேண்டும். அதுவே நீதியானது என்ற (போலி) நியாயப்பாட்டைத் தோற்றுவிப்பது.
ஆக, வலிந்து ஒரு சட்டமூலத்தை நுழைத்து பின்னர் தமிழ்த் தரப்பு அதனை எதிர்ப்பதாகக் காட்டி, அந்த எதிர்ப்புக்கு மதிப்புக் கொடுத்து அந்தச் சட்ட மூலத்தை நீக்குவதாக வெளிப்படுத்திவிட்டு,
நிறைவேற்ற வேண்டியதை நுட்பமாக நிறை வேற்றுவதுதான் உள்நோக்கம்.
இந்த நோக்கத்தை சொல்வதற்காகத்தான் நரையன் நாற்பது செங்காரி முப்பது என்ற பழமொழியை நினைவுபடுத்தினோம்.