முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இதற்கான அளவீடு இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நிலப்பகுதியின் பெரும்பாலான பகுதி மக்களுக்குச் சொந்தமாக உள்ள நிலையில், கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை உரிமை கோருபவர்கள் இருந்தால் ஆவணங்களுடன் வருகை தருமாறும் அரச நில அளவையாளர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் கடற்படையினரால் ஏற்கனவே குறித்த நிலப்பகுதி வேலியிடப்பட்டுள்ளது. அதனை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காகவே தற்போது நில அளவை மேற்கொள்ளப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கோரிக்கைக்கு அமைய, காணி சுவீகரிப்பு அதிகாரியின் கட்டளையின் பிரகாரம் இந்த நில அளவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலப்பகுதியை அபகரிக்க கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இம்முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் காணியை சுவீகரிக்க எடுத்துள்ள நடவடிக்கை மக்களை விசனமடைய வைத்துள்ளதோடு, அதற்கெதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் வசித்துவந்த அரச காணிகள் என 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோட்டாபய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளதோடு, உறவினர் வீடுகளிலும் கொட்டகைகளிலும் வாழ்க்கை நடத்துகின்றனர். இக்காணிகளை விடுவித்து தருமாறு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானதென மக்கள் தெரிவிக்கின்றனர்.