சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்!




தமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது சர்வதேச விசாரணை ஊடாகவே எனக்கான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. எனினும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், சர்வதேசத்திற்கு தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இப்போராட்டத்தை தாம் நடத்தியதாக பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்பதே பாதிக்கப்பட்டோரின் கேள்வியாக அமைந்துள்ளது.
இவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படு தாகவும், மேலும் பலருக்கு என்ன நடந்ததென்ற தெரியாதுள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது எனும் உண்மை அரசாங்கத்திற்குத் தெரியும் என்றும் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மூன்று தடவை எம்மை சந்தித்த ஜனாதிபதி எமக்கான தீர்வு எதனையும் பெற்றுத் தரவில்லை, அவர் எமக்கான தீர்வைத் தரப்போவதில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 7 தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ள சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் தம்மை நடு வீதியில் போராட வைக்காமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது பிள்ளைகள் விடுவிக்கப்படும் வரை அல்லது, அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும், தெரிவித்துள்ளனர்.
விரைவாக தீர்வு கிடைக்காவிடில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமது போராட்டம் தொடரும் எனவும், இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு உதவவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila