ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர முடியாது! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பொதுக்கொள்கை ஒன்றை வகுத்து தனிக்கட்சியாக செயற்பட வேண்டும் என வெளியான செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர முடியாது என்றும், மக்களோடு மாத்திரமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டுச்சேரும் என்றும் காண்டீபன் குறிப்பிட்டார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏமாற்றி கொள்கைகளையும் கைவிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டு என்ற பெயரில் சேர்த்துக்கொள்வது மக்கள் ஆணைக்கு செய்யப்படும் துரோகமாகும். வரலாற்று ரீதியாக தவறிழைத்த கட்சித் தலைவர்கள் இன்றும் பதவிக்காக ”கூட்டு“ என்ற பெயரிலும், பொதுக்கொள்கை என்ற அடிப்படையிலும் ஒன்றுசேர நினைப்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் முன்னணிக்கு அளித்த வாக்குகளுக்கும், மக்கள் ஆணைக்கும் ஒருபோதும் துரோகமிழைக்காது.
நீண்டகாலமாக தேசியத்திற்காக போராடி தேர்தல்கள் பலவற்றில் தோல்வியைக்கண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் தற்போது அடையாளம் கண்டு, வாக்களித்துள்ளனர். சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் தேசியத்தை விலைபேசிய ஏனைய கட்சிகள் பொதுக் கொள்கை என்ற போர்வையில் குளிர்காய்ந்து மீண்டும் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுவதை ஏற்கமுடியாது.
தமிழ் தேசியத்தை நிலைநாட்டி தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்த நினைக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள் விரும்பினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக பொதுக்கொள்கை அடிப்படையிலும், பொதுச் சின்னமொன்றிலும் புதிய கட்சியாக பதிவுசெய்து செயற்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது.
இளைஞர்களையும் அதாவது, புதிய இரத்தங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்து தேசியத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் காண்டீபன் கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila