தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும் ;அனந்தி சசிதரன்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் !
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!
நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறு வாசிப்பாக அமைந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களாக மக்களால் வெற்றிபெறச் செய்யப்பட்டவர்கள் ஊழலற்ற நேர்மையான சேவையை எமது மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக இருந்ததில்லை என்பதுடன் எமது இனத்தின் உரிமை சார்ந்தே இருந்து வந்துள்ளது என்பதனை மீண்டுமொரு தடவை இடித்துரைப்பதாக இந்தத் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளது.
இந்தப் பின்னணியில், வடக்கு கிழக்கில் உள்ள சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் வகையிலான பெரும்பான்மை பலம் எந்தவொரு தமிழிக் கட்சிகளுக்கும் கிடைக்காத திரிசங்கு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் தமிழ் மக்கள் நம்பியிருந்த தமிழ்த் தலைமைகள் மீதான நம்பிக்கையீனமும் தற்போது நம்பியிருக்கும் தலைமையின் மௌனமுமே இவ்வாறு இரண்டும் கெட்டான நிலைக்கு காரணமாகும். இதன் காரணமாக பெரும்பாலான சபைகளில் ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நிலையேற்பட்டுள்ளது.
இது தான் யதார்த்தபூர்வமான உண்மையாகும். அதைவிடுத்து வேறு அர்த்தப்படுத்தல்களை முன்னிறுத்தி காலத்தை வீணடிக்காது மக்கள் நலனை முன்னிறுத்தியதான முடிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து எடுக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் வாக்களித்த மக்கள் அனைவரும் தமிழர்களே. அவர்களை முறையாக வழிநடத்தி நேர்வழியில் ஒன்றிணைக்காமை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் தவறாகும். ஆகவே, மாற்றுத் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மக்களை பழிவாங்கும் விதமாக செயற்படாது பக்கசார்பற்று சேவையாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களினூடான அபிவிருத்தி பணிகளை செவ்வனே செய்து எமது தேசத்தின் அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்தும் விதத்தில் கட்சி, அரசியல் வேறுபாடுகள் கடந்து கொள்கை வழி நின்று அனைவரும் சேவையாற்றுவதே வாக்களித்த எமது மக்களுக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
இவ்வேளையில், பெரும் அரசியல் குழப்ப நிலைக்கு வித்திடுவதாக தென்னிலங்கை தோர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.
அதன் அடிப்படையில், இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் இலங்கை இராணுத்தினரால் வல்வளைப்பு செய்யப்பட்டிருக்கும் நிலங்களின் விடுவிப்பு போன்ற விடயங்களுகான பொறுப்புக் கூறல் கடப்பாட்டில் இருந்து தம்மை விடுவிக்கும் முனைப்பில் இந்த நல்லாட்சி அரசு கவனம் செலுத்தும் அபாயம் உள்ளது.
இதனை முறியடித்து தமிழர்களுக்கு உரிய நீதியை பெற்றுக்கொள்வதற்கும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதான நிரந்தரத் தீர்வை அடைய வேண்டுமாயின் தமிழர் தரப்பின் ஒற்றுமை அவசியமாகும்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானது என்ற அடிப்படையில் எமக்கான நீதி, பிராந்திய உலக வல்லாதிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு மறுக்கப்படும் ஏதுநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென்பதனை தமிழ் மக்கள் தமது தீர்ப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila