முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் கையகப்படுத்தப்பட்டு தற்போது படையினர் வசமுள்ள அனைத்து மரமுந்திரிகை பண்ணைகளையும் கையகப்படுத்தி அதனை காணிகள் அற்ற மக்களிற்கு பகிர்ந்தளிக்க வடமாகாணசபை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதிகாரிகளிற்கு பிறப்பித்துள்ளார்.
வடக்கில் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது உரித்துக்களினை வடமாகாணசபை கையகப்படுத்த வேண்டுமென கோரிக்கை தொடர்ச்சியாகவே விடுக்கப்பட்டு வந்தது.
இறுதி யுத்தத்தின் பின்னராக விடுதலைப்புலிகளது ஆளுகையின் கீழிருந்ததென அடையாளப்படுத்த பெருமளவிலான காணிகள் மற்றும் கட்டடங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கென கூறப்பட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக வன்னியில் விடுதலைப்புலிகளால் பேணப்பட்டு வந்த மரமுந்திரிகை தோட்டங்கள், தென்னம் தோட்டங்கள் இன்று வரை படையினரது பராமரிப்பின் கீழுள்ளது.
இவ்வாறு தன்னிச்சையாக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்துமே பொதுமக்களுடையவையே. இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உரிமை கோரப்படாத காணிகளை வடமாகாணசபை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுவந்திருந்தது.
அதிலும் குறிப்பாக விவசாயப் பண்ணைகளினை மீட்டெடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மரமுந்திரிகை தோட்டங்கள் தொடர்பில் மத்திய அரசின் கீழுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்துடன் பேச்சு நடத்த வடமாகாண சபை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ முற்பட்டிருந்தது.எனினும் மத்திய அரசின் கூட்டுதாபனம் பதிலளிக்க மறுத்து வந்திருந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் படையினர் வசமுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை சுவீகரிக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடமாகாணசபை படையினர் வசமுள்ள அனைத்து மரமுந்திரிகை பண்ணைகளையும் கையகப்படுத்தி அதனை காணிகள் அற்ற மக்களிற்கு பகிர்ந்தளிக்க வடமாகாணசபை முடிவு செய்துள்ளது.