இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘போர்க் குற்றவிசாரணைகளை பாதுகாப்புச்சபை ஒருபோதும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தாது. இதற்கு வீற்றோ அதிகாரமுள்ள எந்தவொரு நாடும் முன்வராது.
ஏனெனில் அந்த நாடுகளின் நடவடிக்கைகளுக்கெதிராக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நாடுகள் திரும்பும் என்பதால் குறித்த நாடுகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடாது.
அத்துடன் இந்த விடயங்களை முன்னின்று நடத்தும் அமெரிக்காகூட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினை நாடாது. ஏனெனில் அமெரிக்கா இதுவரை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்விடயங்களை அறவே செய்யமுடியாது எனத் தெரிந்து கொண்டும் எம்மில் பலர் மக்களுக்குப் பொய்யான பரப்புரைகளை வழங்குவதன் மூலம் அவர்களை தவறாக வழி நடத்தப் பார்க்கின்றார்கள்.
எனவே எதற்கான ஆதரவினைச் சர்வதேசத்தில் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். ஆகவே நாம் எதைச் செய்கின்றோம் எனவும் ஏன் அதைச் செய்கின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தவுமே நாம் இன்று இந்தச் சுதந்திரன் பத்திரிகையினை வெளியிடுகின்றோம்’ என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.