மன்னார் நகர நுழைவாயிலில் உடைக்கப்பட்ட விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்துக்கிடமான எலும்பு துண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
|
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த விற்பனை நிலையம் ஒன்று அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. குறித்த கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வரும் மண் மன்னாரில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றுக்கு விற்கப்பட்ட மண்ணில் மனித எலும்புத் துண்டுகள் என சந்தேகிக்கப்படும் பல எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணை கடந்த சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார். குறித்த மண்ணை வீட்டினுள் கொட்டிய போது, சந்தேகத்துக்கிடமான எலும்புத்துண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த வீட்டின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்கியதுடன், இன்று வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|
மன்னாரில் மணலுக்குள் எலும்புத் துண்டுகள்!
Add Comments