குறித்த வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும், செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து முப்படையினரின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி சர்வமதத்தலத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
இதனை தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடி, தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில், சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தலத்தினை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய குறித்த வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா? என்று வினா எழுப்பியுள்ளார்.
இதன்போது, சபையில் இருந்த அனைத்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வமதத்தலம் தேவையா என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினாவிய போது,
நாங்கள் பலருடன் கலந்துரையாடியே சர்வமதத்தலம் கட்டுவதற்குறிய தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தோம். அது தேவையில்லை என்றால் அந்த திட்டத்தினை விடுவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், முதலமைச்சர் இத்திட்டத்தினை கைவிடுமாறு தீர்மானத்தினை குறிப்பிட்டுள்ளார்.