மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆளுநரொருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையிலுள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர்.
இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்,
தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும், வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறியமுடிந்தது.
Add Comments