
இச் சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணியும் நடைபெறவுள்ளது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனமானது ஏற்பாடு செய்துள்ள இக் கதவடைப்பு மற்றும் கண்டன பேரணி தொடர்பாக அவ் அமைப் பின் தலைவர் வே.தவச்செல்வன் கேசரிக்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
வடமராச்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் தென்னிலங்கையை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இச் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை கைது செய்து அதனை தடுத்து நிறுத்துமாறு அப் பகுதி மீனவ மக்கள் தொடர்ச்சியாக அதிகாரிகளை கோரி வந்திருந்தனர்.
அதிகாரிகளும் தொடர்ச்சியாக அம் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கண்டும் காணாதும் போன்று அலட்சியமாக செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.கடற்தொழிலில் நீரி யல் வளத்துறை திணைக்களத்தின் நிர்வாக செயற்பாட்டை முடக்கி முற்றுகை போராட்டம் நடத்தியிருந்தோம்.
இதன்போது சட்டவிரோத முறையில் கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்றவர்களை வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் பெருமளவானவரை கைது செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியதையடுத்து நிர்வாக முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதிகாரிகள் தாம் கொடுத்த உறுதிமொழியை நடமுறைப்படுத்தவில்லை. இந்நிலையிலேயே அதிகாரிகளது செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்றைய தினம் கண்டன பேரணிக்கும் கதவடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
இதன்படி இன்றைய தினம் காலை முதல் நண்பகல் ஒரு மணி வரை இக் கதவடைப்புக்கு அனைத்து வியாபார நிலையங்களும், சந்தைகளும், தனியார் நிறுவனங்களும் ஆதரவழிக்க வேண்டும் எனவும், தமது நிறுவனங்களின் முன்பாக கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே இக் கண்டன போராட்டத்திற்கு வடக்கின் முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனங்கள் ஆதரவளிப்பதாக கூறியுள்ளன.
இவை தவிர யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், தனியார் பேரூந்து சங் கம், பொது அமைப்புக்கள் போன்றனவும் இதற்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் முன்பிருந்து மாபெரும் கண்டன பேரணியானது யாழ்.மாவட்ட செயலகம் வரை செல்லும். இவ்வாறு செல்லும் பேரணியானது மாவட்ட செயலகம் முன்பாக கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் சட்டவிரோத கடலட்டை தொழிலை நிறுத்த கோரிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மாவட்ட அரச அதிபரிடம் கையளிப்போம் எனத் தெரிவித்துள்ளனா்.