நாயாறுப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

நாயாறு-செம்மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அபகரிக்க எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது எனக் கூறி, அவ்விடத்தில் காணி அளவீட்டுக்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை சென்றுள்ளனர்.
இதனை அறித்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கு கூடி ஏதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அங்கு கூடினர்.
அளவீட்டு பணிகளை செய்ய கூடாது என மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கு வலியுறுத்தினர். எதிர்ப்பு நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் குழப்ப நிலமை ஏற்பட்டது .
அளவீட்டு பணயை நிறுத்தும்படி பிரதேசசெயலாளரிடம் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், அளவீட்டு பணியை நிறுத்தும்படி கடிதம் வழங்கினார்.
அடுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வரை அளவீட்டு பணிகளை இடைநிறுத்தும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் பௌத்த பிக்குவொருவர் விகாரையமைத்து குடியிருந்து வருகிறார்.
அவர் அவ்விடத்திற்கு வந்து, அளவீட்டு பணிகளை நிறுத்த வேண்டாமென வாதாடினார். பௌத்த பிக்கு அங்கு விகாரையமைக்க யார் அனுமதித்தார்கள் என பிரதேசசெயலாளரிடம் மக்கள் கேள்வியெழுப்பினார்கள். அவர் யாருடைய அனுமதியும் பெறாமல் விகாரையமைத்துள்ளதாக பிரதேசசெயலாளர் பதிலளித்தார்.
“அனுமதி பெறாமல் அங்கு எப்படி விகாரையமைக்க முடியும்?“ என வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன், அந்த பிக்குவிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு- “2,500 வருடங்களின் முன்னர் இங்கு பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். பன்சாலையொன்று இங்கு அமைந்திருந்தது. அந்த இடத்திலேயே விகாரையமைத்துள்ளேன்“ என பதிலளித்தார்.
உடனே விவசாய அமைச்சர் – “6,000 வருடங்களின் முன்னர் பொலன்னறுவ, அநுராதபுர பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்த, ஆலயங்கள் இருந்த வரலாறெல்லாம் உள்ளது. அங்கு போய் நாம் உரிமைகோரலாமா?“ என பதில் கேள்வி கேட்டார்.
“இதை நீங்கள் அரசாங்கத்துடன் பேசி தீருங்கள். இப்போது, இந்த இடத்தை பாதுகாக்க அரசு எம்மை அனுமதித்துள்ளது“ என கூறி, பிக்கு நழுவி சென்றுவிட்டார்.
மக்கள், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பையடுத்து அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்ட பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila