சுமந்திரன் எம்.பியை கொந்தளிக்க வைத்த ஜனாதிபதி!

மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசின் கீழ் உள்நாட்டில் நடத்தப்படும் விசாரணைகள் மூலம் யுத்தகால அநீதிகளுக்கு நீதி கிட்டமாட்டா என்பது தெளிவாகி வருகின்றது. ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய சர்வதேசப்
பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் வரை வலியுறுத்துவோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தானும் சேர்ந்து கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளில் இருந்து இலங்கை விலக முடியாது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டுப் பங்களிப்புடனான நீதி விசாரணைப் பொறிமுறை பற்றியே அந்தத் தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், உள்நாட்டுக்குள், சுதேச முறைமையிலான விசாரணைதான் நடத்தப்படும் என்று ஜனாதிபதியும் அரசும் தரப்பினரும் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர்.
கொழும்பில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உட்பட சில விடயங்களில் உண்மையான நீதி விசாரணைகளை நடத்துபவர்கள் போல அரச தரப்பினர் வெளிப்பார்வைக்குப் பாசாங்கு காட்ட முயற்சித்தனர். ஆனால், குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் போது தப்ப விடப்படுகின்றனர் என்பதை இப்போதைய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
படையினருக்கு எதிரான விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என நாட்டின் தலைவரே உயர் புலன் விசாரணை அதிகாரிகளை அழைத்து எச்சரித்துக் கடிந்து கொண்டார் என்ற தகவலை சிங்கள ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
நடக்கின்ற சம்பவங்கள், குற்றமிழைத்த படையினரைக் காப்பாற்றுவதில் அரச தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றமை போன்றவை உள்ளக நீதிப் பொறிமுறை மீது முழு நம்பிக்கையின்மையைத் திரும்பவும் உறுதிப்படுத்தி வருகின்றன.
முப்படையினரையும் விடுவிக்கும் பிரகடனம் ஒன்றைத் தாம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் விடுப்பார் என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், உண்மை நிலையை - யதார்த்தத்தை உரிய தரப்புகளுக்கு, உரிய முறையில் நாம் விளக்கமாகவும், தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைப்போம்.
ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின்போது ஐ.நா. செயலாளர் நாயகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க இருக்கின்றார். அதற்கான இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனையும் என்னையும் கடந்த வாரம் சந்தித்தார்.
உள்ளூர் நீதி முறைமைகளில் உள்ள ஓட்டைகள் அம்பலமாகி வருகின்றன. நீதிமன்றம் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்ட மூத்த படை அதிகாரியே நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சீத்துவத்தில் உள்ளூர் பொறிமுறையில் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கு இடமேயில்லை.
ஆகவே, சர்வதேச பங்களிப்புடனான நீதிமுறையில் அன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவே மாட்டாது என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் வரை மிகத் தெளிவாக எடுத்துரைப்போம் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila