இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கும் நிலையில் அவ்வாறு வழங்கவில்லை.
நாங்கள் ஆராய்ந்தமைக்கு அமைவாக அமைச்சர் ராஜித கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ச காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள்.ஆனால் ராஜபக்ச காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இப்போது காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். மேலும் மகாவலி எல் வலய பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினையல்ல. 1980ஆம் ஆண்டு தொடக்கம் உக்கிரம் பெற்றுவரும் பிரச்சினை.
ஆனால் இப்போது சிலர் வந்து மணலாறு பறிபோனால் தமிழ் தேசம் பறிபோனதற்கு சமம் என கூறுகிறார்கள். இவர்கள் 10 வருடங்கள் நடாளுமன்றில் இருந்தார்கள்.அந்த 10 வருடத்தில் 10 தடவைகள் கூட மகாவலி எல் வலய பிரச்சினை குறித்து பேசியிருக்கவில்லை. எனவே இந்த நபர்களுடைய கருத்து விசித்திரமாக உள்ளது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவற்றில் இந்த காணி பிணக்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பிலும் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை நாங்கள் தேடி கொண்டிருக்கிறோம். அதற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பதற்கான போராட்டங்களை செய்யவேண்டும்.இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலணியிலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை தெளிவாக கூறியுள்ளார். ஜனாதிபதி அவ்வாறு நடக்கவில்லை என கூறினாலும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்