ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கியின் ஹொங்கொங்கில் வங்கி கிளையின் வங்கிக் கணக்கில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 22 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு எடுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை கோரிய போதிலும் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.
விசாரணைகளுக்காக வங்கியிடம் தகவல்களை பெற பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹொங்கொங் சென்றிருந்தது.
தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஹொங்கொங் வங்கியில் உள்ள பணம் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட தரகு பணம் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், குறித்த தரகு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அத்துடன் ஹொங்கொங்கில் உள்ள 22 மில்லியன் டொலர் பணத்தை உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அப்படியில்லை எனில் இந்த விடயத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மூடி மறைக்க முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எதனையும் நாட்டுக்கு மறைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Add Comments