
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும், சூழல் அரசியலும் நில அபகரிப்பும் போரின் பச்சை முகம் என்ற தொனிப் பொருளிலான உரை அரங்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது. இங்கு முதன்மை விருந்தினர் உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நில அபகரிப்புக்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அந்தச் சட்டங்களின் கீழ் எமது மக்களின் பூர்வீக குடியிருப்புக் காணிகள் அரசுடமைகளாக்கப்பட்டு வருகின்றன. எமது மக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றுவதும் அவர்கள் நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ள முடியாமல் தடுப்பதும் என்று பலவித வழிகளில் இந்தப் பச்சைப் போர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவை பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் எமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை நல்குவதும் தமிழ் மக்களின் ஏகோபித்த குரல்களுக்கு எதிராக அரசுக்கு வக்காளத்து வாங்குவதுமான நிகழ்வுகள் எம்மை வெட்கித்தலைகுனிய வைக்கின்றது. ஒரு இனத்தையே இல்லாமல் அழிப்பதும் அவர்களின் இருப்பிடங்களை இல்லாமல் செய்வதுக்குமான செயல்களுக்கு எம்முடைய தலைமைகள் துணை போகின்றார்கள்.
வடகிழக்கு சிறப்பு அரச தலைவர் செயலணியின் கூட்டத்துக்குப் போகாது வருட முடிவின் முன் அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று நெருக்கடி கொடுக்க இதுவே தருணம் என்றேன். இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி இந்தச் செயலணிக் கூட்டத்துக்கு நாம் சென்றேயாக வேண்டும், அரசியல் தீர்வும் பொருளாதார முன்னேற்றமும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்று கூறி எம்மவர் அடுத்த கூட்டத்துக்குப் போனார்கள்.
நெருக்குதல்களைக் கொடுக்காது தொடர்ந்து வரும் அரசுகளிடமிருந்து அரசியல் தீர்வை எவ்வாறு பெறப் போகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தமிழ்த் தலைமைகளைத் தான் நாம் இன்று கொண்டுள்ளோம். கடைசியில் தீர்வு எதுவும் கிட்டாது. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள முதலீட்டாளர்களை வடக்குக்கு கொண்டு வருவதாகவே இது முடியும்.