![]()
வல்வெட்டித்துறை- தீருவில் திடலில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கை மனுவை பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
|
தீருவில் பகுதியில் கடந்த 5ம் திகதி நினைவு தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் நகரசபை தவிசாளரை அன்றைய தினமே மதியம் 12 மணிக்கு நீதிமன்றம் வருமாறு நீதிமன்ற அழைப்பாணை ஒன்றை வல்வெட்டித்துறை பொலிஸார் வழங்கியிருந்தனர்.
இதனால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதுடன், தவிசாளர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இதன்போது தவிசாளர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா ஆஜராகி நகரசபையின் செயற்பாடு சட்டரீதியானது என்ற வாதத்தினை முன்வைத்திருந்தார். இதனடிப்படையில் 8ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிவான் 8ம் திகதி தவிசாளர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய இன்று நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார். இது குறித்து தவிசாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ந.சுஜீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 120ன் கீழ் வல்வெட்டித்துறை நகரசபையினால் தூபி அமைக்கும் பணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை மனு ஒன்றினை முன்வைத்திருந்தனர். அது தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றிருந்தது. இலங்கை சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதே நகரசபை. அந்த நகரசபையினால் உருவாக்கப்படும் தீர்மானங்கள் சட்டரீதியானவை என்பதுடன், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தூபி அல்லது கட்டிடம் அமைக்கும் பணிகள் சட்டவிரோதமான பணத்தில் கட்டப்படவில்லை. அதேபோல் நகரசபை தவிசாளர் சட்டவிரோதமான செயற்பாட்டை செய்யவில்லை. ஆகவே தண்டனை சட் டக்கோவையின் பிரிவு 120ன் கீழ் நகரசபையின் செயற்பாட்டுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என பருத்துறை நீதிவான் நீதிமன்ற, நீதிவான் நளினி சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நகரசபை தவிசாளர் தமது செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
|
தீருவில் திடலில் நினைவுத் தூபி அமைக்கலாம் - தடை கோரிய பொலிசாரின் மனு நிராகரிப்பு!
Related Post:
Add Comments