மைத்திரி - மகிந்த அரசாங்கத்தில் எந்த பதவிகளையும் பெற்றுக்கொள்ள போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ச தலைமையில் நியமித்துள்ள அரசாங்கம் தொடர்பாக உலக நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் ராஜதந்திர பயணங்களை கூட தடை செய்யும் நிலைமை காணப்படுவதால், கோத்தபாய மற்றும் பசில் ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான தடை விதிக்கப்பட்டால், இரட்டை குடியுரிமை கொண்டுள்ள இவர்கள், தமது பிள்ளைகள் மற்றும் சொத்துக்கள் இருக்கும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என கருதுவதாக கூறப்படுகிறது.
அதேவேளை அமெரிக்கா உட்பட முக்கிய நாடுகள் இலங்கையில் நடந்து வரும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு அமெரிக்கா ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் கேட்டுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட முடியாது போயுள்ளதாலும் இதுவரை எடுத்த தீர்மானங்களின் போது ராஜபக்ச தரப்பின் யோசனைகளை கவனத்தில் கொள்ளாத காரணத்தினாலும் குறிப்பாக பசில் ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருப்பதாக பசிலுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comments