சமனங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டு மக்களால் பூஜை வழிபாடுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இவ்வாலயம் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டட பொருட்கள் இவ்வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) விகாரையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தமையால் பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசவாசி ஒருவர் கூறுகையில், “இவ்வாலயத்தை பரம்பரை பரம்பரையாக நாம் வழிபட்டு வருகின்றோம். ஆனால் தற்போது இவ்வாலயம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமென கூறி புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்கின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடியதுடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளையும் முன்னெடுத்திருந்ததன் அடிப்படையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளர் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, குறித்த இடத்தில் அனுராதபுரக் காலத்தின் புராதான சின்னங்கள் உள்ளன. அவைகளை அழியாமல் தடுப்பதற்கு இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாக கூறியிருந்தார்.